பள்ளிபாளையத்தில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு

பள்ளிபாளையத்தில்  கிணற்றுக்குள்  விழுந்த நாயை தீயணைப்புத்துறை மீட்பு
X

பள்ளிபாளையம் அக்ரஹாரத்தில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட நாய்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் காகத்திற்கு வைத்திருந்த உணவை சாப்பிட சென்ற நாய் தண்ணீர் இல்லாத 50அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நாயை உயிருடன் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் சாந்தி பிஸ்கட் கடை அருகில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால், இக்கிணறு பயன்பாடு இன்றி கிடக்கிறது.

இந்நிலையில் இன்று காலை அந்த கிணற்றின் மீது காகம் சாப்பிட யாரோ உணவு வைத்துள்ளனர். காகத்திற்கு வைத்திருந்த உணவை சாப்பிட சென்ற நாய் எதிர்பாராமல் அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் நாயை மீட்பதற்காக குமராபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமராபாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி நாயை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!