குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
குமாரபாளையத்தில் குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டார்.
குமாரபாளையத்தில் குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை, கலெக்டர் பார்வையிட்டார்.
மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருப்பதாலும், அணைக்கு வரும் நீர் வரத்து குறைவாக இருப்பதாலும், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டி, குமாரபாளையம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். நீர் வரத்து குறைவாக இருப்பதால், நகர மக்களின் குடிநீர் தேவை தினமும் பூர்த்தி செய்யக்கூடிய அளவில் உள்ளதா? என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, காவேரி நகரில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு வந்து பார்வையிட்டார்.
அணையின் நீர் மட்டம் குறைந்த அளவு இருக்கும் நிலையில், நீர் வரத்து குறைந்த அளவாக இருக்கும் போது, பொதுமக்களுக்கு போதுமானதாக இருக்குமா? என நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் வசம் கேட்டறிந்தார். நீர் வரத்து ஆயிரத்து 500 என்ற அளவில் வந்தாலும், நகர மக்களுக்கு நீர் விநியோகம் செய்ய முடியுமென ஆணையர் மற்றும் பொறியாளர் தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் குமரன் கூறியதாவது:
குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகளை உள்ளடக்கிய 7.10 ச.கி.மீ. பரப்பளவு, 85 ஆயிரம் மக்கட்தொகை கொண்டதாகும். இங்கு 22,053 குடியிருப்புகள் உள்ளன.
குமாரபாளையம் நகராட்சியின் குடிநீர் திட்டம் காவேரி நகர் பகுதியில் இருந்து, இயல்பு நீரேற்று நிலையம் 1989ல் ஒன்றும், குடிநீர் அபிவிருத்தி திட்டம் 2001ம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்டது. இயல்பு நீரேற்று நிலையத்தில் 60:00 ஹெச்.பி. டர்பைன் மோட்டார், மற்றும் 25:00 எச்.பி. ததிறன் கொண்ட நீர் மூழ்கி மின் மோட்டோர்கள் மூலம், 7.50 எம்.எல்.டி. அளவு குடிநீர், நீரேற்றம் செய்யப்பட்டு, இடைப்பாடி சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து 120 எச்.பி. மோனோ பிளாக் மோட்டார் மற்றும் 50 எச்.பி. திறன்கொண்ட நீர்மூழ்கி மின் மோட்டார் மூலம் 71.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து 8 குடிநீர் மேல்நிலை தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஆற்றில் நீர்வரத்து குறையும் நிலை ஏற்படுவதை கருதி கடந்த டிசம்பர் மாதம், ஆற்றில் உள்ள குடிநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. நாளது தேதி வரை குமாரபாளையம் நகராட்சியில் 13,086 குடிநீர் கிளை இணைப்புகள் 93 பொதுக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்சமயம் வரவுள்ள கோடைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும் குறைந்தபட்ச ஆயிரத்து 500 கனஅடி நீரைக்கொண்டு இந்நகரின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய போதுமானதாகும். காவிரி ஆற்றின் நீர் வரத்து, நகரில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் பெறப்படும் தண்ணீரை கொண்டு கோடைக்கால வறட்சியினை ஈடு செய்ய இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu