குமாரபாளையத்தில் விஸ்வகர்மா திட்டத்தை துவக்கி வைத்த குஜராத் எம்.பி.
குமாரபாளையம் அருகே விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்து, கைவினை தொழிலாளர்களிடம் மனுக்கள் பெற்றார்.
குமாரபாளையம் அருகே மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை குஜராத் மாநிலங்களவை பெண் உறுப்பினர் ரமீலா பென் பாரா துவக்கி வைத்தார். மேலும் ஆங்கில புத்தாண்டினை கேக் வெட்டி கொண்டாடினார்.
மத்திய அரசு விஸ்வகர்மா என்ற திட்டத்தின் மூலம் சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், குலத் தொழிலை வளர்க்கவும் விஸ்வகர்மா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கடன் உதவி மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள சூழ்நிலையில், கிராமப் பகுதிகளிலும் விஸ்வகர்மா திட்டம் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரபிலா பின் பாரா கலந்துகொண்டு பயனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:-
குஜராத் மாநிலத்தின் கடைக்கோடி பகுதியான சாந்தி நகர் பகுதியில் இருந்து நான் வந்துள்ளேன். விஸ்வகர்மா திட்டம் சிறந்த திட்டம். இது சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளில், ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் பிரதமரின் லட்சியம். குடிநீர் குழாய் அமைத்தல், வீடு தோறும் கழிப்பிடம் அமைத்தல், வீடு கட்டி தருதல் உள்ளிட்ட எண்ணற்ற மக்களின் அத்தியாவசிய திட்டங்களில் இந்த விஸ்வகர்மா திட்டமும் ஒன்று. தமிழகத்தில் 86 லட்சம் மனுக்கள் இது வரை பெறப்பட்டுள்ளது. இதில் 32 லட்சம் மனுக்கள் மாவட்ட நிர்வாக மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தச்சு வேலை, குயவர், துணி தைப்பவர், நாவிதர் உள்ளிட்ட கைவினை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, இந்த முகாமில் பொதுமக்கள் 36 மனுக்கள் கொடுக்க, அதற்குரிய ஒப்புதல் சீட்டினை எம்.பி. வழங்கினார். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர் சிவகாமி பரமசிவம், மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட விளையாட்டு திறம் மேம்பாட்டு பிரிவு தலைவர் நாகராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், மாவட்ட துணை தலைவர் கனகராஜ், நகர தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu