குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மேலிட பார்வையாளர் ஆய்வு
குமாரபாளையத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை மேலிட பார்வையாளர் மகேஸ்வரன் இன்று ஆய்வு செய்தார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங், சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி ஆகியோர் குமாரபாளையம் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். நேற்று நாமக்கல் மாவட்ட மேலிட பார்வையாளர் மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்., குமாரபாளையம் காவிரி கரையோரப்பகுதியான மணிமேகலை தெரு, இந்திரா நகர், கலைமகள் தெரு, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடராஜா திருமண மண்டபம், பாலக்கரை அண்ணா நகர், பாலக்கரை ரேசன் கடை, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை, இருக்கும் வீடுகள் ஆகியன குறித்தும், இவர்கள் தங்க வைக்கப்படும் இடங்கள் குறித்தும், அங்கு தேவையான வசதிகள் செய்து தயார் நிலையில் உள்ளனவா? என்பது குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் அணை நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாமக்கல் மாவட்டத்தில் மேலிட பார்வையாளராக அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தோம். கடந்த முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் இங்கு வந்தோம். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் போதிய இருப்பு உள்ளதா? மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? என பார்வையிட்டோம்.
மாவட்ட நிர்வாகமும் முக்கியமான இடங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணிப்பு குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகள் அனைத்தும் சீராக எடுக்கபட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழை வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியின் அருகில் உள்ள ரேஷன் கடையில் தேவையான அரிசி 8 டன். அந்த 8 டன் அரிசியும் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 60 சதவீத பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் ஆகிய காவிரி கரையோரப்பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகத்தினர் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
வெள்ளம் வரும் சமயத்தில் முனைப்புடன் செயல்பட்டு பாதுகாப்பு பணிகளை செயல்படுத்துவார்கள். தற்காலிகமாக இவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் தற்போது எடுக்கபட்டு வருகின்றன. வேறு இடங்களில் இவர்களை நிரந்தரமாக வீடுகள் கொடுத்து தங்க வைப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu