வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தின சிறப்பு வழிபாடு..!
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் பஞ்சமி நாளில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்ததையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
குமாரபாளையத்தில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் பஞ்சமி நாளில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. நேற்று பஞ்சமி தினத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற தேங்காயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். வாராஹி அம்மன் குறித்து பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
பல காலமாக வாராஹி அம்மன் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. நல்லெண்ணெய் தீபமேற்றி, பஞ்சமி திதியன்று பிரம்ம முகூர்த்த வேளையில் வாராஹி வழிபாட்டினை துவங்கலாம். தினமும் வாராஹியை வழிபட முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், பஞ்சமி திதி நாளிலும் வழிபட்டால் முழு பலனும் கிடைக்கும்.
சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.
சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu