குமாரபாளையத்தில் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு
குமாரபாளையம் 12வது வார்டு காந்திபுரம் பகுதியில் முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குமாரபாளையம் 12வது வார்டு காந்திபுரம் பகுதியில் சீரங்க செட்டியார் டேப் தறி பட்டறை வீதியில் வடிகால்களை சுத்தம் செய்ய முடியாத வகையில் அப்பகுதியினர் பலரும் தங்கம் வீடுகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்து பாத்ரூம், திண்ணை, வாகனம் நிறுத்தும் இடம் என கட்டிக்கொண்டனர். இதனால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நகராட்சி கமிஷனர் உத்திரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், பொக்லின் உதவியுடன் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு அ.தி.மு.க. வார்டு செயலரும், கூட்டுறவு கட்டிட கடன் சங்க துணை தலைவருமான கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நகர அ.தி.மு.க. நகர செயலரும் கவுன்சிலருமான பாலசுப்ரமணி, பொருளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இது குறித்து பாலசுப்ரமணி கூறுகையில், ஆக்கிரமிப்பு அகற்றும் முன்பு முன்னறிவிப்பு எதுவும் தரவில்லை. நாராயண நகர் பகுதியில் பல முறை முன்னறிவிப்பு கொடுத்துதான் ஆக்கிரமிப்பு அகற்றினர். இந்த வீதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என்றார்.
12வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் அழகேசன் கூறுகையில், வடிகால் அடைப்பு என பலமுறை பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். வார்டு அ.தி.மு.க. செயலாளர் வீட்டின் முன்பு இருந்த ஆக்கிரமிப்பை தகவல் கொடுத்ததின் பேரில் அவர் அகற்றி விட்டார். அவர் வீட்டின் முன்பு இருந்த திண்ணை வடிகால் தூய்மை செய்ய இடையூறாக இருந்தது. அதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இவர் வீடு மட்டும் அல்ல, இந்த வீதியில் ஆக்கிரமிப்பு செய்த அனைவர் வீடுகளின் முன்பும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என கூறினார்.
எஸ்.ஒ. ராமமூர்த்தி கூறுகையில், வடிக்கால் தூய்மை பணி செய்ய முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யபட்ட பகுதியில் மட்டும்தான் அகற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu