குமாரபாளையம் அருகே டூவீலர்-சரக்கு வாகனம் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே கல்லூரி மாணவர் ஓட்டி வந்த டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் பலத்த காயமடைந்தார்.
கடலூர் பகுதியில் வசிப்பவர் காமேஷ், 23. இவர் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பார்ம் டி. படித்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை 05:10 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையை வட்டமலை பகுதியில் தனது ராயல் என்பீல்டு டூவீலரில் கடக்கும் போது, எதிர் திசையில் உள்ள சர்வீஸ் சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், இவர் வந்த டூவீலர் மீது மோத, காமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் பட்லூரை சேர்ந்த பூபதி, 26, என்பவரை கைது செய்தனர்.
முன் விரோதம் காரணமாக மைக் செட் ஊழியர் மீது தாக்குதல்
குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் லோகநாதன், 29. மைக் செட் தொழிலாளி. இவரும், இவரது நண்பர் நாகராஜ், 31, என்பவரும் செப். 23ல்,அதே பகுதியில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த நாகராஜ் உடன் மில்லில் பணியாற்றும் சதீஷ், குரு, கார்த்தி ஆகிய மூன்று பேர்களும், மில்லில் முதல் நாள் நடந்த சம்பவம் குறித்து பேச வாக்குவாதம் முற்றியது. இதில் லோகநாதன் குறுக்கிட்டு, சமாதானம் பேசி நாகராஜை அழைத்து சென்றுள்ளார்.
நேற்றுமுன்தினம் சுந்தரம் நகர் பகுதியில் இரவு 07:30 மணியளவில் லோகநாதன் நடந்து சென்ற போது, அங்கு வந்த சதீஷ், குரு, கார்த்தி மூவரும், நாகராஜை எங்கு ஒளித்து வைத்து உள்ளாய்? என்று கேட்டு, கற்கள், தடி ஆகியவற்றால் பலமாக தாக்கியதில் லோகநாதன் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், குரு, கார்த்திக் ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரில் வசிப்பவர் சுசிலா, 45. ஆக. 7ம் தேதி தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக செல்லவேண்டியிருந்தது. அதற்காக தனது இரண்டரை பவுன் தங்க நகையை வங்கியில் அடகு வைக்க, ஒரு பையில் நகையை எடுத்துக்கொண்டு புறவழிச்சாலை, அமிர்தா அபார்ட்மெண்ட் பகுதியில் காலை 09:00 மணியளவில் நடந்து சென்றார்.
அப்போது இவரை பின்தொடர்ந்த வந்த டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வந்த நபர், இவரது கையில் இருந்த பையை பறித்துச் சென்றார். அந்த பதட்டத்தில் தந்தையை காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு தந்தையை அழைத்து வந்த பின், நடந்த சம்பவத்தை குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu