குமாரபாளையத்தில் இன்றைய கிரைம் செய்திகள்

குமாரபாளையத்தில் இன்றைய கிரைம் செய்திகள்
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் செக் மோசடி வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 59. இவர் தொழில் தொடர்பாக குமாரபாளையம் தெற்கு காலனியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு, 2006ல், 6 லட்சம் ரூபாய்க்கு செக் (வங்கி காசோலை) கொடுத்ததாக தெரிகிறது. வங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளது. இதனால் இது குறித்து விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதி மன்ற உத்திரவின்படி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. முருகேசன், பயிற்சி எஸ்.ஐ. ஐசக் பத்மநாபன் உள்ளிட்ட போலீசார் நடராஜனை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

குமாரபாளையத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதில் உற்பத்தியாகும் ஜவுளிகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கபடுகிறது. அவ்வாறு ஜவுளி வாங்கும் வியாபாரிகள், உற்பத்தியாளர்களுக்கு காசோலையை அனுப்பி வைத்து விடுவார்கள்.

அந்த காசோலையை 3 மாதம் தள்ளி தேதியிட்டு கொடுப்பார்கள். அதுவரை உற்பத்தியாளர்களுக்கு முதலீடு பணத்திற்கு வட்டி கூட கிடைக்காது. மூன்று மாதம் கழித்து அந்த செக்கை வங்கியில் செலுத்தினால் பணம் இல்லை என்று திரும்ப அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர் வசம் கூறினால், வசூல் மிக மோசமாக உள்ளது. ஆகவே, ஒரு மாதம், இரண்டு மாதம் கழித்து வங்கியில் போடுங்கள் என கூறுவார்கள். அப்படி போட்டால், ஒரு சில பார்டிகளின் செக், பணம் வசூல் ஆகிவிடும். ஆனால், சில நபர்களின் செக் பணம் வசூல் ஆகாமல், இது போல் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அலைந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

நீதி மன்ற உத்திரவுப்படி குமாரபாளையம் தலைமறைவு குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோட்டைமேடு, ஈஸ்வரன் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 51. இவருக்கும், எதிர் தரப்பினருக்கும் 2006ல் ஏற்பட்ட தகராறில், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த கூளையன் (எ) குமார், 43, குமாரபாளையம் அருகே வளையக்காரனூரை சேர்ந்த வெங்கடேஷ்,45, ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இந்த வழக்கு நடந்து வந்த வேளையில், நீதிமன்ற உத்திரவின்படி இருவரையும், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. முருகேசன், பயிற்சி எஸ்.ஐ. ஐசக் பத்மநாபன் உள்ளிட்ட போலீசார் கைது செய்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் குற்றவாளிகள்.சம்பவம் நடந்த சமயத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மீதி இரண்டு பேர் இதுநாள் வரை தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தனர். ஆனால், போலீசார் தீவிரமாக கண்காணித்து. சமயம் பார்த்து கைது செய்தனர்.

Tags

Next Story