குமாரபாளையம் கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது..
குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் விபத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதால் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இதேபோல் அதிக வாகனங்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு உள்ளது. தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, எம்.ஜி.ஆர். நகர் , குமாரபாளையம் நகரம், பவானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கத்தேரி பிரிவில்தான் சாலையை கடந்து செல்கிறது.
அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் இந்த சாலையை கடந்துதான் சென்றாக வேண்டும். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பல விபத்துக்கள் நடந்து பல குடும்பங்கள் தவித்து வரும் நிலையும் உண்டு. இதனை தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குமாரபாளையம் அரசு பள்ளி சாலை பகுதியில் விபத்து அச்சத்தில் மாணவ, மாணவியர் சாலையை கடந்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி நேரம் முடிந்து மாலை 04:30 மணியவில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சேலம் சாலையை கடந்து செல்கின்றனர். அப்போது வேகமாக வரும் வாகனங்கள் மாணவ, மாணவியர் மீது மோதி, அதிக விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்வார்கள். பெரும்பாலான நாட்கள் போலீசார் இருப்பதில்லை. உயர் அதிகாரிகளின் உத்திரவின் பேரில் பல பணிகள் காரணமாக வேறு ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் உள்ளது. அவர்களும் நகர எல்லைப் பகுதியில் வந்து போக்குவரத்து சீர் செய்வதில்லை.
குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துக்களை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டிவைடர்களால் விபத்துக்கள் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்துடன் சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்கலாம்.
சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.
பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும். இரவு நேரங்களில் ஒளியை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்து செல்லும் பொழுது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
சிறு குழந்தைகள் நடைபாதைகளில் தனியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பெற்றோர்கள் நடைப்பாதையில் குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது, சாலையில் செல்லும் வாகனத்திற்கும் குழந்தைகளுக்கும் நடுவில் செல்ல வேண்டும்.
நடைபாதைகள் பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டது. அதனை பாதசாரிகள் பயன்படுத்த வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் சாலையின் இடது புறத்தில் பாதசாரிகள் செல்ல வேண்டும்.
ஆபத்துக் காலத்தை தவிர பிறசமயங்களில் வாகனங்கள் பயன்படுத்தும் சாலையில் பாதசாரிகள் செல்லக்கூடாது.மரணம் விளைவிக்கக்கூடிய செயல் என்பதால் சாலை நடுவே செல்லக்கூடாது. சாலையில் செல்லும் பொழுது செய்தித்தாள்களை படித்துக் கொண்டோ விளம்பரங்களை பார்த்துக்கொண்டோ செல்லக்கூடாது.
சாலையை கடக்கும்பொழுது நண்பர்கள் எதிர்பாராமல் பார்த்தவுடன் நலம் விசாரிக்ககூடாது. நடைபாதைக்கு சென்ற பிறகு உங்களின் நல விசாரிப்புகளை தொடரலாம்.பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும். பேருந்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சாலை நடுவே செல்ல கூடாது. சாலை தடுப்புகள் உள்ள சாலையில், கடப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாலையை கடந்து செல்லுங்கள். ஓடும் பேருந்தை துரத்திக் கொண்டு ஓடக்கூடாது. விபத்தில்லா நீண்டகால வாழ்க்கைக்கு சாலை விதிகளை கடைபிடித்தால் போதுமானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu