விஷேச நாட்களில் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்.
குமாரபாளையத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் பொதுமக்கள் பேருந்தில் ஏற கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குமாரபளையத்திற்கு பவானியில் இருந்துதான் சேலம் உள்ளிட்ட பஸ்கள் வருகின்றன. பவானியில் புறப்படும் பஸ்கள் அந்தியூர் பிரிவு, கடைவீதி, பூக்கடை நிறுத்தம், கூடுதுறை கோயில் நிறுத்தம், காளிங்கராயன்பாளையம் நிறுத்தம், லட்சுமி நகர், கவுரி தியேட்டர், கே.ஒ.என்.தியேட்டர், காலனி மருத்துவமனை, பள்ளிபாளையம் பிரிவு என இத்தனை இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி, உட்கார சீட் இல்லாத நிலையில்தான் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் ஏறும் பொதுமக்கள், சேலம் வரையிலும் நின்று கொண்டே செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, குழந்தைகள் வைத்திருப்போர், வயதானவர்கள், ஜவுளி வியாபாரம் தொடர்பாக பார்சலுடன் சேலம் செல்வோர் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது.
பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால் நீண்ட நேரம் நின்று கொண்டு இருக்கும் நிலை ஏற்படுகிறது. பஸ்கள் வந்தால் கூட்டமாக முண்டியடித்து ஓடிச் சென்று ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை வைத்து இருப்பவர்கள், வயதானவர்கள் பஸ் ஏற முடிவதில்லை. திருமணம், அமாவாசை, திருவிழா, உள்ளிட்ட சீசன் சமயங்களில் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் ஏற முடிவதில்லை. பஸ்ஸில் இடம் இல்லாததால், சீசன் சமயங்களில் புறவழிச்சாலை வழியாக சேலம் சென்று விடுகின்றன. ஆகவே குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் வகையில் சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், பழனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu