முதல்வர் போனில் பேசிய மாணவனுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்த அமைச்சர்
தமிழக முதல்வர் ஸ்டாலின் போனில் பேசிய குமாரபாளையம் ஏழை மாணவனை நேரில் சந்தித்து உதவி செய்வதாக அமைச்சர் மதிவேந்தன் உறுதி கூறினார்.
குமாரபாளையம், அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி பாண்டிசெல்வி. இவர்களின் மூத்த மகன் நவீன், காவ்யஸ்ரீ, பரணிஸ்ரீ என்ற இரு மகள்களும் உள்ளனர். நவீன் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று ஈரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியில், இளநிலை கணிப்பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். மாணவனின் தாயார் பாண்டிச் செல்வி மாற்றுத்திறனாளி. தந்தை சண்முகம் இதய நோயால் பாதிக்கப்பட்ட தால் கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 8ம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற நவீன், தனது கல்லூரி படிப்பிற்கு உதவிட வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
இதையடுத்து, மறுநாள் காலை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனின் உதவியாளர்கள் நவீனின் வீட்டிற்கு நேரில் சென்று பேசியதுடன், அவருக்கான கல்வி கட்டணத்தை கல்லூரியில் முழுமையாக செலுத்தினர். மீண்டும் உதவிகள் தேவையெனில் அழைக்கும்படி தெரிவித்துவிட்டு சென்றனர். முதல்வரும் நவீன் குடும்பத்தாருடன் போனில் பேசி மேலும் உதவி செய்வதாக கூறினார். நேற்று இரவு 08:00 மணியளவில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் இந்த மாணவனின் வீட்டிற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி, மேலும் எந்த உதவி தேவை பட்டாலும் சொல்லுங்கள் என்று கூறி சென்றார். அப்போது நகர தி.மு.க. செயலர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu