குமாரபாளையத்தில் தடுப்பூசிக்கு பொதுமக்களை அலையவிட்ட சுகாதாரத்துறை

குமாரபாளையத்தில் தடுப்பூசிக்கு பொதுமக்களை அலையவிட்ட சுகாதாரத்துறை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை சுகாதாரத்துறையினர் அலைய விட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலரும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் எங்கெங்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற பட்டியல் முதல் நாள் இரவே மாவட்ட சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் எந்த பட்டியலும் வெளியாகவில்லை. தடுப்பூசி போட தயாராக இருந்த பொதுமக்கள் எங்கு தடுப்பூசி போடபடுகிறது என தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணியவில் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் பற்றிய பட்டியல் வெளியிடபட்டது.

இதில் குமாரபாளையத்தில் சி.எஸ்.ஐ. பள்ளி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர் பள்ளி, ஜி.ஹெச்., ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுவதாக பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பட்டியலில் கண்ட பள்ளிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர்.

ஆனால் அங்கு பள்ளி கூட திறக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு பள்ளியாக சுற்றி அலைந்து விட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போட எவ்வித முன்னேற்பாடும் செய்யாத நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போட அலையும் நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.

இது குறித்து சி.எஸ்.ஐ, பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யாமணி ஆகியோர் கூறுகையில், எங்களுக்கு சுகாதாரத்துறையினர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆகவே பள்ளியை திறந்து வைப்பது, தூய்மை படுத்துவது என்பது உள்ளிட்ட எவ்வித முன்னேற்பாடு பணிகள் செய்யவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story