குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட ஓராண்டு நிறைவு விழா...
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில், தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
மாநிலத்தில் உள்ள 92 ஆயிரத்து 297 குடியிருப்புகளில் உள்ள சுமார் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்தை கடந்தாண்டு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முறையான கல்வித் தகுதியுடன் பயிற்சி பெற்ற 2 லட்சம் தன்னார்வலர்கள் மாதம் ரூ.1,000 உதவித்தொகையுடன் இந்தத் திட்டத்தில் பணியாற்றுகின்றனர். 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தை திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், குமாரபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி ஓராண்டு நிறைவு விழா தன்னார்வலர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஜமுனா, தீனா, சமூக சேவகி சித்ரா அன்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி குறித்து விடியல் பிரகாஷ் கூறியதாவது:
மாணவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது இடத்தில் அல்லது தன்னார்வலர் இல்லத்தில் மாணவர்களை சேர்த்து 1:20 விகிதப்படி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை அவர்களுக்கு கதை, ஆடல்-பாடல், நாடகம், விளையாட்டு, பொம்மலாட்டம் ஆகியன செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்தத் திட்டம் ஓர் ஆண்டு நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. தன்னார்வலர்கள் பலரும் இன்றும் மெனக்கெடலுடன் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது என விடியல் பிரகாஷ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu