ஒளிரும் போர்டுகள் மீது பிளெக்ஸ் நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தல்!

குமாரபாளையத்தில் ஒளிரும் போர்டுகள் மீது பிளெக்ஸ் போர்டு வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

குமாரபாளையத்தில் ஒளிரும் போர்டுகள் மீது பிளெக்ஸ் போர்டு வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துக்களை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பலனாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேலம் சாலை டிவைடர்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஒளிரும் தகடுகள் பொருத்தப்பட்டன. இவைகளில் விபத்துக்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒளிரும் போர்டுகளின் மீது கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் சாலையில் உள்ள டிவைடர்களில் விபத்துக்களை தடுக்க ஒளிரும் விளக்குகள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் தகடுகள் மற்றும் பிரிவு சாலைகளில் பதிக்கும் வகையிலான ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன. சில நபர்கள் இதன் உபயோகம் தெரியாமல், கண்ணீர் அஞ்சலி உள்ளிட்ட விளம்பர பிளெக்ஸ் பேனர்களை வைக்கிறார்கள். இதனால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எந்த நோக்கத்திற்காக ஒளிரும் போர்டுகள் வைக்கப்படுகிறது என்பது அறியாமல் அலட்சியப்படுத்தும் நோக்கத்தில் பிற போர்டுகள் வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Next Story