குமாரபாளையம்; விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ( கோப்பு படம்)
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சதுர்த்தியையொட்டி, உடையார்பேட்டை, ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நடனவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் கோவில், கள்ளிபாளையம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
சதுர்த்தி குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:
அருகம்புல்லைச் சமர்ப்பித்து விநாயகருக்குச் செய்யப்படும் வழிபாட்டை ‘தூர்வாயுக்ம பூஜை’ என்கின்றன ஞானநூல்கள்.
பிணிகள், காரியத் தடைகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமைமிக்க வழிபாடு இது. குறிப்பாக சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் விசேஷம்
அரு கம்புல் மகிமைகள்...
அனலாசுரனை விழுங்கிய விநாயகரின் திருமேனி வெம்மையால் தகித்தது. குளிர் நிறைந்த சந்திரனை அவரின் திருமுடியில் சூட்டியும் வெப்பம் தணியவில்லையாம். இந்த நிலையில் முனிவர்கள் சிலர் அறுகம்புல்லை விநாயகரின் சிரசில் சமர்ப்பிக்க உடலும் உள்ளமும் குளிர்ந்து விநாயகர் அகமகிழ்ந்தார். ஆக, பிள்ளையார் வழிபாட்டில் அறுகம்புல் முக்கிய இடம் பிடித்தது. அறுகம்புல்லின் மகிமை அளப்பரியது. அறுகம்புல் சமர்ப்பித்து ஆனைமுகனை வழிபட்டால், சகல சம்பத்துகளும் கிடைக்கும்.
விநாயகரை வழிபட நம் சங்கடங்கள் எல்லாம் நீங்கும்; ஐங்கரன் அருளால் சந்தோஷம் நிலைக்கும்.
மிக எளிமையானது இந்த வழிபாடு. சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வேளையில் பிள்ளையாரைப் பூஜிப்பது வழக்கம். வீட்டில் உடல் உள்ளத் தூய்மையோடு பூஜைக்குத் தயார் ஆகவேண்டும்.பூஜைக்கான இடத்தைக் கழுவிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அறுகம்புல்லால் மேடை அமைப்பது இந்தப் பூஜையின் சிறப்பம்சம். மனைப்பலகை ஒன்றை அலங்கரித்து சந்தனக் குங்குமப் பொட்டு வைத்து, அருகம்புற்களைப் பரப்பி மேடை அமைக்கலாம்.அந்த மேடையில் விநாயகர் சிலைகள், திருவுருவப் படங்களை வைத்து வழிபடலாம். முறையாக வணங்கி பிள்ளையாரை பூஜையில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டு வழிபாட்டை ஆரம்பிக்கலாம். பிள்ளையார் பெருமானின் 21 திருநாமங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபடவேண்டும்.
சங்கடஹர சதுர்த்தி அதிர்ஷ்டம்
இந்த வழிபாட்டின்போது விரதம் இருப்பவர்களுக்கு, விசேஷ தீர்த்தம் வழங்குவது உண்டு. தீர்த்தத்தில் அறுகம்புல் இட்டு, அத்துடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு அந்தத் தீர்த்தத்தை வழங்குவதுண்டு. இதை `கணேச அறுகாமிர்தம்’ என்பார்கள். இதனால் பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்களில் இந்த வழிபாட்டைச் செய்வதால் விநாயகரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அவரின் அனுக்கிரஹத்தால் தோஷங்கள், தடைகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளும் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu