விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை: இயந்திரத்தின் மூலம் நடவு செய்ய கோரிக்கை
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் விலை நிலத்தில் நாற்று நடும் பெண்கள்.
விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரத்தின் மூலம் நடவு செய்ய தமிழக அரசு, வேளாண்மைத்துறை சார்பில் உதவ குமாரபாளையம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:-
குமாரபாளையம் தாலுகா அளவில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது. மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இரு மாதங்களுக்கு முன்பு, தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருந்தாலும் விவசாயம் செய்ய கூலி வேலை ஆட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்படவேண்டியுள்ளது. விவசாய கூலி ஆட்கள் மகாத்மா காந்தி 100 நாட்கள் வேலை திட்டத்தில் சேர்ந்து விட்டனர்.
எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் 100 நாட்கள் வேலை திட்டத்தில் சேர்ந்த ஆட்களை விவசாய பணி செய்ய அனுப்பி வைத்து, உணவுப்பொருள் உற்பத்தி பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் வேளாண்மைத்துறை மூலம், மற்ற வேளாண்மை உபகரணங்கள் வழங்குவது போல், நெல் நடவு இயந்திரம், குறைந்த அளவு வாடகைக்கு வழங்கி, விவசாயிகள் குறை தீர்க்க வேண்டும். இது குறித்து, மாவட்ட கலெக்டருக்கும் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது போல் செய்தால் மட்டுமே விவசாய பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். நாற்று விட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் அதனை பிடுங்கி, பன்படுத்தப்பட்ட நிலத்தில் நட வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் நாற்றுகளை எடுக்காவிட்டால், வேர் விட்டு,மீண்டும் பயிர் செய்தால், உரிய பலன் கிடைக்காத நிலை ஏற்படும். இன்றைய நிலையில் விவசாய பணிகள் செய்வது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. விவசாயக்கூலி வேலை செய்ய கல்லங்காட்டு வலசு பகுதியில் 10 பேர் கூட இல்லாத நிலைதான் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் இதனை கருத்தில் கொண்டு விவசாய தொழில் சிறக்கவும், உணவுப்பொருட்கள் விளைவிக்கவும் உதவிட வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu