சமர் திட்ட பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர்
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் சமர் திட்ட பயிற்சி வகுப்பை முன்னாள் அமைச்சர் தங்கமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் சமர் திட்ட பயிற்சி வகுப்பை முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.
மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பிராசசிங் ஆலை இணைந்து நடத்தும் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்துபயிற்சி பெறுவோருக்கு பாட புத்தங்கள் வழங்கிப் பேசியதாவது:
சமர் திட்டம் கைத்தறி, கைவினை பொருட்கள், பட்டு வளர்ப்பு மற்றும் சணல் ஆகியவை திறன் மேம்பாடு மூலம் மேம்படுத்தப்படும். சுயதொழில் திறன்களை ஊக்குவிப்பது, நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஜவுளி மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
எழுத்தறிவில்லாத நபர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க கூடிய வகுப்பினை தொடங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாற்பது வயதைத் தாண்டி விட்டால் பெண்கள், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பார்த்து கொள்வது மட்டுமே முக்கியப்பணியாக இருக்கிறது. அந்த குடும்பத்தில் அவரது கணவர் ஒருவர் மட்டுமே வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி, குடும்பத்தை காக்கும் சூழ்நிலை உள்ளது.. இது போன்ற குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உதவுவதற்காக முன்னாள் ஜெயலிலாத சுய உதவிக்குழுக்களை அதிக அளவில் தொடங்க நடவடிக்கை எடுத்தார்.
இது தொழில் மிகுந்த பகுதி. பெண்களுக்கு தொழில் தெரியாத காரணத் தினால்தான் வீட்டில் பெண்கள் முடங்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் தொழில் கற்றுக்கொண்டு, வீட்டில் இருந்தபடி தொழில் செய்து,.அதன் மூலமாக வருமானம் பெற்றால், குடும்பம் பொருளாதார முன்னேற்றம் பெற உதவியாக இருக்கும். பெண்களுக்கு உதவி செய்யக்கூடிய மத்திய அரசின் இந்தத்திட்டத்தை தொடங்க முன்வந்துள்ள கல்லூரி நிர்வாகத்தினரை பாராட்டுகிறேன்.
இந்த கல்லூரியில் நூறு சதவீத வேலைவாய்ப்பை பெற்று தரும் பாலிடெக்னிக் கல்லூரி என்பதில் பெருமையாக உள்ளது. 700, 800 பேர் படிக்கும் இடத்தில் எப்படி நூறு சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க முடியும் என சந்தேகமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில். இக்கல்லூரியில் நடந்த ஒரு வேலைவாய்ப்பு முகாமுக்கு அழைத்தார்கள். நானே 800க்கும் மேற்பட்ட பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவுகளை வழங்கினேன்.
ஆதாயத்திற்காக கல்வி நிறுவனங்களை நடத்தும் நபர்கள் மத்தியில், படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு, அதை இத்தனை ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் இந்த கல்லூரி நிர்வாகத்தில் சேவை மனப்பான்மை பாராட்டுக்குரியது. கொரோனா காலத்தில் தனியார் கல்லூரி மட்டும் அல்ல, தனியார் பள்ளி ஆசிரியர்களும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இவர்களுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், சட்டமன்றத்தில் இது பற்றி பேசினேன்.
அரசு கல்லூரி, அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் பெற்று விடுகிறர்கள். ஆனால் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எதாவது உதவி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றாலும், அந்த எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே உள்ளது. அந்த இரண்டு ஆண்டு காலமும் தனியார் ஆசிரியர்கள் தங்கள் வாழ்வை மாணவர்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.
பள்ளி, கல்லூரி செயல்படாத காலத்தில் மொபைல் போன் மூலம் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மொபைல் போன் இல்லாமல், வகுப்பினை தொடர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டுதான் அனைவருக்கும் ஆல் பாஸ் என்று போட்டு தொடர்ந்து உயர்கல்வி படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இந்த 45 நாட்கள் வழங்கப்படும் பயிற்சியின் மூலம் வங்கி உதவியுடன் தையல் இயந்திரம் மானியத்துடன் வாங்க வழிவகை செய்துள்ளார்கள். உங்கள் வீட்டில் இருந்தவாறு தினமும் 500 ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும். தற்போது உள்ள தொழிலதிபர்கள் யாரும் திடீரென தொழிலதிபர்கள் ஆகிவிடவில்லை. தொடக்க காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறி இருக்கிறார்கள்.
நாமும் உழைப்பின் மீது அக்கறையும் நம்பிக்கையும் வைத்து உழைக்க வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களாகிய உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைப்பது, அவர்கள் சுகமாக வாழ அல்ல. நீங்கள் கஷ்டமில்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். நீங்களும் அக்கறையுடன் படித்து வாழ்வில் முன்னேறி, பெற்றோர்கள் கனவை நனவாக்க வேண்டும். ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்றுதான், 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தற்போது 550 பேர் டாக்டர்களாக வந்துள்ளனர். நானும் அரசு பள்ளி மாணவன்தான். கஷ்டப்பட்டு வந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார் தங்கமணி எம்எல்ஏ.
இதில் கல்லூரி நிர்வாகிகள் புருஷோத்தமன், ஈஸ்வர், முதல்வர் பாலமுருகன், நகர அதிமுக செயலர் பாலசுப்ரமணி, ஒன்றிய அதிமுக செயலர் குமரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu