நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக வெட்டப்பட்ட மரங்கள்..! வெறிச்சோடிய சாலை..!
நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படும் சாலை.
குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளுக்காக மேம்பாலம் அமைக்கும்பொருட்டு சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
குமாரபாளையம் அருகே சேலம்- கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தப் பகுதி மாறியுள்ளது.
தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் நிறைய உள்ளதால், மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் போதிய போலீசார் நியமித்து, இதைப்போன்ற போக்குவரத்து நெரிசலான இடங்களில் போலீசாரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நியமித்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரண பயத்துடன் சாலையை கடக்கும் பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவில் மேம்பாலம் அமைக்க மரக்கிளைகளை வெட்டும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
2023 ஜூலை இறுதி வாரத்தில் பூமி பூஜை போடப்பட்டு, மேம்பால பணிகள் துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் அளவீடு பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. மேம்பாலம் வருமா, வராதா? என எதிர்பார்ப்புடன் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விரிவாக்கப்பணிகளுக்காக மரங்களை வெட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கு பதிலாக நூற்றுக்கணக்கான மரங்களை நடவேண்டும். நல்ல மரங்களை வெட்டிவிட்டு அழகுக்கு வளர்க்கப்படும் குறைந்தகால ஆயுள் உள்ள மரங்களை நடாமல் வேம்பு, உசிலை, மருதம், இலுப்பை,வன்னி போன்ற நீண்டகால மரங்களை நடவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu