குமாரபாளையத்தில் கழிவுநீர் வடிகால் சுற்றுச்சுவர் அமைக்க ஆர்.டி.ஒ. நேரில் ஆய்வு
குமாரபாளையத்தில் கழிவுநீர் வடிகால் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து பெரந்தார்காடு பகுதியில் ஆர்.டி.ஒ. இளவரசி நேரில் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் பெரந்தார்காடு பகுதியில் கோம்புபள்ளம் கழிவுநீர் வடிகால் உள்ளது. மழைக்காலங்களில் அதிக நீர் வரத்து காரணமாக இதன் சுற்றுச்சுவர் இடிந்து விட்டது. இதனால் மழை வரும்போதெல்லாம் இந்த பள்ளத்தில் வரும் மழை நீர் கழிவுநீரோடு சேர்ந்துஅருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் செல்வதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது.
மேலும் இந்த பள்ளத்தில் வரும் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் இப்பகுதி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பெரும் பாதிப்பை பலருக்கும் ஏற்படுத்தி வருகிறது. துர்நாற்றத்துடன், அச்சத்துடனும் இருந்து வரும் நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வடிகாலின் சுற்றுச்சுவர் இருந்த இடத்தில் வேப்பமரம், மாமரம், அரசமரம் உள்ளிட்ட 5 மரங்கள் உள்ளன. இதில் இரு மரம் வலுவிழந்து அருகில் உள்ள கட்டிடத்தின் மீது சாய்ந்த நிலையில் எந்நேரமும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்து வருகிறது.
இது குறித்து நகர பொறுப்பாளர் செல்வம் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் ஆர்.டி.ஒ. விடம் மனு கொடுத்து, மரங்களை அகற்றி, வடிகாலுக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுத்து, பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். இந்த புகாரின் படி திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி கூறினார்.
தாசில்தார் தமிழரசி, எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu