தங்கமணியிடம் சிக்கியது எவ்வளவு? லாக்கர் சாவி, ஹார்டு டிஸ்க் பறிமுதல்
முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆன தங்கமணியின் வீடு, அலுவலகங்கள், மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் வீடுகளில், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையம் உள்பட, முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 68 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.
சென்னையில் மட்டும் 14 இடங்களிலும் அதுதவிர, கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. கர்நாடகாவில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், எந்த தொழிலும் செய்யாத தங்கமணியின் மனைவி சாந்தி, வருமானவரி செலுத்தியது எப்படி என்பன உள்ளிட்ட கிடுக்கிக் கேள்விகளால் லஞ்ச ஒழிப்புத்துறை துளைத்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சியிலும் தங்கமணி முதலீடு செய்தது குறித்தும் துருவித்துருவி விசாரணை நடந்துள்ளது.
இந்த நிலையில், ஒருசில இடங்கள் தவிர பெரும்பாலாலும் சோதனை நிறைவு பெற்ற நிலையில், இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்று நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி பணம், அத்துடன், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தங்கமணியின் வங்கி கணக்கு விவரங்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu