5 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவுக்கு அனுமதி மறுப்பால் பொதுமக்கள் தர்ணா
காமராஜ் நகர் சி.எஸ்.ஐ. பள்ளியில் நுழைவுப்பகுதியில் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் நகராட்சி நகரமன்ற தேர்தலில் 33 வார்டுகளில் 188 பேர் போட்டியிடும் நிலையில் 73 ஓட்டுப்பதிவு மையங்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அரசு சார்பில் வழங்கப்பட்ட பூத் சிலிப்பில் காலை 7 மணி முதல் மாலை 5 வரை பொதுமக்களுக்கும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்த நபர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 73 ஓட்டுப்பதிவு மையங்களில் 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, கொரோனா பாதித்த நபர்களுக்காக என கூறி, ஓட்டுச்சாவடியில் இருந்த நபர்களும் வெளியேற்றப்பட்டனர். இதனால் காமராஜ் நகர் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காமராஜ் நகர் சி.எஸ்.ஐ. பள்ளியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சித்ரா கூறுகையில், கொரோனா பாதித்தவர்கள் மட்டும் என்றால், ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் கொரோனா பாதித்தவர்கள் இல்லை. 5 மணிக்கு ஓட்டுச்சாவடி உள்ளே இருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டுப்பதிவு செய்ய செய்வதுதான் வழக்கமான தேர்தல் நடைமுறை.
இந்த தேர்தல் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. ஓட்டுப்பதிவு செய்ய வந்த நபர்களை 5 மணி ஆகிவிட்டது என்று வெளியே அனுப்பியது பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி பணியாளர்கள் காலை முதல் பல்வேறு பணிகளை முடித்து விட்டு 5 மணிக்கு முன்பே ஒட்டு போட வந்துள்ளனர். அவர்களையும் விட மறுத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தயானதேவி கூறுகையில், எனது தந்தை கிருஷ்ணன் உடல்நலமில்லாதவர். கூட்டம் அதிகம் இருந்தால் நோய் தொற்று பரவினால் என்ன செய்வது என்று மாலை 4:30 மணிக்கு அழைத்து வந்தேன். வரிசையில் நின்ற என்னையும் என் அப்பாவை மற்றும் பலரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வெளியே செல்லுங்கள் என கூறிவிட்டார்கள். இது ஜனநாயக தேர்தலா? இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் சி.எஸ்.ஐ. பள்ளி மற்றும் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu