குமாரபாளையத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

குமாரபாளையத்தில்  பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

குமாரபாளையம்,  ஏரித்தெரு பகுதியில் வடிகால் தூய்மை பணி செய்திடக்கோரி திடீர் சாலை மறியல் நடைபெற்றது.

குமாரபாளையத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் ஏரித்தெரு பகுதியில், வடிகால் தூய்மை பணி செய்யாததால், கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் 5,6 மற்றும் 15வது வார்டு பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமலும், கொசு தொல்லையாலும் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை கூறியும், தூய்மைப்பணி நடைபெறாததால், இடைப்பாடி சாலையில், இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் குமாரபாளையம் போலீசார், நேரில் வந்து, உடனே வடிகால் கழிவுநீர் அகற்றப்படும் என்று கூறியதுடன், ஆட்களை விட்டு பணிகள் தொடங்கினர். இதனால், சாலை மறியல் கைவிடப்பட்டது.

இது பற்றி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடைப்பாடி சாலையில், சாலை உயர்ந்து வடிகால் தாழ்ந்து போனதால், வடிகால் மிகவும் பள்ளமாகி கழிவுநீர் தேங்கி விடுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும், அவர்களும் கண்டு கொள்வதாக இல்லை. வடிகால் மட்டத்தை, சாலை மட்டம் அளவிற்கு உயர்த்தினால் மட்டுமே, இதற்கு தீர்வு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story