விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். கூலி உயர்வு பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே போனது. பிப்.11ல் உடன்பாடு ஏற்படாததால், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கண்டன கோஷமிட்டனர்.
விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும் என வட்டாட்சியர் கூறினார்.
இதன்படி நேற்று எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சண்முகவேல் தலைமையில் இதே குழுவினருடன் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 09:30 மணி வரை நீடித்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையறிந்த தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து அடப்பு தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு வந்த எங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. எங்களை கைது செய் என்று கோஷங்கள் போட்டவர்கள் மீது எந்த அதிகாரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த தைரியத்தில் பேச்சுவார்த்தைக்கு வருவது? என்று கூறினார்
அனைத்து விசைத்தறி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி கூறுகையில், குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வுகேட்டு 15 நாட்களுக்கும் மேலாக மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் ஜவுளி உற்பத்தியாளர்கள் அடப்பு தறி உரிமையாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு தருவதாக கூறினார்கள். அதே 10 சதவீத கூலி உயர்வினை தொழிலாளர்களுக்கு தருவதாக கூறினார்கள். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. 20 சதவீதமாவது கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
இதன் அடுத்த கட்டமாக பிப். 20ல் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் தொழிற்சங்கங்கள் சார்பில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம். இதில் உடன்பாடு ஏற்படும் வரை எங்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாத நிலையில் வெளியில் வந்த நகராட்சி சேர்மன் தொழிலாளர்களிடம் கூருகையில், நகரில் 10 ஆயிரத்திற்கும் மேலான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் சுமார் 500 பேர்தான் போராட்டத்தில் கலந்து உள்ளீர்கள். மற்றவர்கள் இரவு நேரத்தில், தற்போது எங்கள் முதலாளி கொடுக்கும் கூலி உயர்வே போதுமானது, என்று எண்ணி, இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வருகிறார்கள். சுமார் 70 சதவீத ஜவுளிகள் உற்பத்தி செய்யபட்டுதான் வருகிறது. உங்கள் தொழிலாளர்களிடையே ஒற்றுமை இல்லை. இதை பயன்படுத்தி உரிமையாளர்கள் உங்களை ஏமாற்றி வருகிறர்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில் நகர தி.மு.க. செயலர் செல்வம், ஓ.ஏ.பி. வட்டாட்சியர் தங்கம், காவல் ஆய்வாளர் மலர்விழி, வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, பாலுசாமி, நஞ்சப்பன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu