கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு..!
தீயில் கருகிய கோழிப்பண்ணை விவசாயிக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர் தங்கமணி.
குமாரபாளையம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,740 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் சென்று ஆறுதல்.கூறினார்.
குமாரபாளையம் அருகே உள்ள களியனூர் கிராமத்திற்கு உட்பட்ட வெள்ளப்பாறை என்னும் கிராமத்தில் விவசாயி கருப்பண்ணன் என்பவர் தனது விவசாய நிலம் அருகே 2 கோழி பண்ணை செட் அமைத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை 08:00 மணி அளவில் வழக்கம் போல் தனது கோழிகளுக்கு குடிநீர் மாற்றி வைத்துவிட்டு வெளியே வந்த பொழுது, ஒரு கோழி பண்ணை பகுதியில் இருந்து லேசான புகை மட்டும் வெளிவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பண்ணன் உள்ளே சென்ற பொழுது லேசான புகை என்பதால் தண்ணீர் எடுத்து வீசி புகையை கட்டுப்படுத்த முயற்சி செய்து உள்ளார். ஆனால், புகையானது தீயாக பரவி அந்த செட்டு முழுவதும் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வெப்படை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனால் சுமார் 3,000 சதுர அடியில் அமைக்கப்பட்ட கோழி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 2,740 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தீ விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீ விபத்தில் ஏற்பட்ட இடத்தினை பார்வையிட்டார். மேலும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கருப்பண்ணனுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட கருப்பண்ணனுக்கு வருவாய் துறையினர் மூலம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu