புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு 'தலைவலி'!
இரண்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளிபாளையத்தில் உள்ள ஒருசில பேக்கரிகள் திறக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் வராத நிலையில், காலாவதியான பொருட்களை அகற்றி, பேக்கரியை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவத் தொடங்கியதால், கடந்த 2 மாதத்துக்கு மேலாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, டீ கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளை தமிழக அரசு முழுவதுமாக மூட உத்தரவிட்டுருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டீ கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றை கடைகள் காலை 6 :00 மணி முதல், மாலை 7:00 மணி வரை திறந்து, பார்சல் டீ மட்டும் வழங்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், இரண்டு மாத காலமாக பூட்டிக் கிடந்த டீ கடை, பேக்கரிகள் இன்று திறக்கப்பட்டன. பழைய காலாவதி பொருட்களை அகற்றிவிட்டு, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, "இன்ஸ்டாநியூஸ்" செய்தி இணையதளத்திடம் கருத்து தெரிவித்த டீக்கடை, பேக்கரி உரிமையாளர்கள் சிலர், "கடந்த 2 மாதத்திற்கு மேலாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடையில் உள்ள பிஸ்கட், கார வகைகள், இனிப்புகள், குளிர்பானங்கள், கேக்குகள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டன. அவற்றை இனி விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, பழைய இருப்புகள், ஸ்நாக்ஸ் வகைகளை அகற்றி புதியதாக பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். இரண்டு மாதங்களாக கடை மூடப்பட்டதால் வருமானமின்றி, மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். பேக்கரிகளுக்கு பொருள் இருப்பு வாங்க, குறைந்தபட்சம் ஐந்து லட்ச ரூபாய் வரை தேவைப்படும். வாடிக்கையாளர்கள் வராத நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் கடைகளை திறப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu