மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தற்கொலை முயற்சி: தந்தை உயிரிழப்பு

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் தந்தை சீனிவாசன் உயிரிழப்பு.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆயக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். விசைத்தறி கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி நித்யா மற்றும் மகன்,மகளுடன் கடந்த 10-வருடங்களாக ஆயக்காட்டூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு வெப்படை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6-ம்வகுப்பு படிக்கும் 12-வயது மகன் பரத்ராஜ் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இதனால் கடந்த ஒரு வருடமாக மனமுடைந்த நிலையில் குடும்பத்தினா் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சீனிவாசன் குடும்பத்தினர் உயிரிழந்த தனது மகன் பரத்ராஜ்க்கு நேற்று நினைவு தினம் அனுசரிக்கும் வகையில் மகனின் புகைப்படம் முன்பு மகனுக்கு பிடித்த உணவு வகைகளை படையிலிட்டு வழிபாடு செய்துள்ளனர். மகனின் பிரிவால் மனமுடைந்த குடும்பத்தினர் படைத்த உணவில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து அப்பகுதியினர் தகவலறிந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைகாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தந்தை சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த தாய் நித்யா மற்றும் மகள் யசோதாவை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கபட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தில் தந்தை உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..