குமாரபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
X
பள்ளி பாளையம்அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பள்ளி பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் அரசு விரைவு பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் சேகர். விசைத்தறி கூடங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிப்பு செய்து வரும் லேத் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 08:00 மணியளவில் மாதேஸ்வரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தொழில் காரணமாக, தனது கூடத்தில் வேலை செய்யும் செந்தில்குமாரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அப்போது சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது,ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில், படுகாயமடைந்த லேத் ஆலை உரிமையாளர் சேகர் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் அப்பகுதியினர் உடனடியாக மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த போது சேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் விபத்து குறித்து அரசு பஸ் ஓட்டுநர் முருகேசனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக அதிகாலையில் சென்னையில் இருந்து கோவை நோக்கி பள்ளிபாளையம் வழியாக ஈரோடு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் ஸ்டேட் வங்கி முன்பு சாலையின் நடுவே டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கம் காரணமாக தடுப்பில் மோதினாரா? அல்லது பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியதா?என்பது குறித்து போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் தொடர்ந்து பள்ளிபாளையம் பகுதியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன விபத்தை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
உங்கள் திறன்களுக்கு ஏற்ப புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் – AI உதவியுடன்!