குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா

குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில்  நவரத்தின விழா
X

குமாரபாளையத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நவரத்தின விழாவில் சபரிமலையில் சேவை செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

குமாரபாளையத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் நாராயண நகர் கிளை சார்பில் நவரத்தின விழா மாவட்ட செயலாளர் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட கையேட்டினை தேசிய தலைவர் ஐயப்பன் வெளியிட்டார். சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்திட 32 ஆண்டுகளாக மாணவர்களை அனுப்பி வைத்த கந்தசாமி கண்டர், கே.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகளுக்கும், ஐயப்பா சேவா சங்க கிளை நிர்வாகிகளுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியம் வழங்கினார். சபரிமலையில் அன்னதானம் வழங்க, மளிகை பொருட்கள், நிதி உதவி வழங்கி உதவியவர்களுக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபு சான்றிதழ்கள், விருது வழங்கினார். நாமக்கல் மாவட்ட அளவில் 86 ஐயப்ப சேவா கிளை சங்கங்கள் இருந்த நிலையில் புதியதாக 10 சேவா சங்க கிளைகள் நிறுவப்பட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்து, பட்டயங்களை மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன் வழங்கினார்.

தொடர்ந்து சபரிமலையில் 60 நாட்கள் சேவை செய்த மாவட்ட கவுரவ தலைவர், வழக்கறிஞர் கார்த்திகேயன் கவுரவிக்கப்பட்டார். திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியிலிருந்து சபரிமலை சென்ற பஸ் குமாரபாளையத்தில் விபத்துக்குள்ளான போது, அதில் சிக்கியவர்களை மீட்டு சேவை செய்த குமாரபாளையம் கருமாரியம்மன் கிளை பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் பாராட்டி விருது வழங்கினார். மேலும் ஆக்சிஜன் சேவை, ஸ்ட்ரெட்சர் சேவை, மருத்துவ உதவிகள் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிர்வாகிகள் ஸ்ரீதர், நாராயணன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

விழா குறித்து ஐயப்ப குருசாமிகள் கூறியதாவது:-

சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுளாக கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார் பந்தள மன்னன். கழுத்தில் மணியோடு பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன். மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது. பந்தள ராணிக்கும் குழந்தை பிறந்தது. நாட்கள் செல்லச் செல்ல விதி அரசி ரூபத்தில் விளையாடியது. தனது மகனை அரசனாக்க வேண்டும் என்பதற்காக மணிகண்டனை தவிர்த்து வந்தாள் அரசி. தலைவலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். அரசவை வைத்தியரை கைக்குள் போட்டுக்கொண்டு தலை வலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் எனக் கூற வைத்தாள்.

தாயின் நோய் தீர புலிப்பால் கொண்டு வர வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன். தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினார். முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார். இருமுடிகளையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றார்.

காட்டுக்கு செல்லும் வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலிகளாக புடை சூழ புலிமேல் ஏறி பந்தள நாட்டுக்குச் சென்றார் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.அவதார நாயகன் தர்ம சாஸ்தா அய்யன், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் ஐயப்பன்.

ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும்போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களைக் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. தேங்காய்க்குள் நெய் ஊற்றிக்கொண்டு சென்றால் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடிகட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது. நெய் தேங்காய் கொண்டு போய் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து விட்டு அதை பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலை ஆக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய் அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. இப்போதும் கூட பழைய முறையைப் பின்பற்றக்கூடிய கேரள ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யாமல், நெய் தோணியில் கொட்டிவிட்டு, அதிலிருந்து சிறிது நெய் பிரசாதமாக கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. தற்போது நேரடியாக ஐயப்ப சாமி சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!