நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்கள் நிறுத்தம்
குமாரபாளையம் பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சங்கமேஸ்வரன்
குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் சங்க கட்டிடத்தில் தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்கள் நிறுத்தப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சங்கமேஸ்வரன் மேலும் கூறியதாவது: விசைத்தறிகளில் 40ம் நெம்பர் நூல் போட்டுத்தான் காட்டன் ஜவுளி ரகங்கள் தயார் செய்யப்பட்டு வந்தது. இது நூல் கட்டு ஒன்றுக்கு ஆயிரம் என இருந்தது. சில நாட்களாக சிறிது, சிறிதாக உயர்ந்து தற்போது ஆயிரத்து 500 என விலை அதிகரித்துள்ளது. இதனால் 100 சதவீதம் காட்டன் ரகங்கள் உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 20 முதல் 30 சதவீதம் வரைதான் காட்டன் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மற்றவர்கள் பாலியஸ்டர் ரகங்களுக்கு மாறி விட்டனர். சில பார்ட்டிகள் கேட்பதால், திருப்பூர் பனியன் கழிவுகளை கொண்டு தயாரிக்கபடும் ஓ.ஈ. எனப்படும் மலிவு விலை நூல் வாங்கி காட்டன் ரகங்கள் தயாரித்தும் வருகிறோம். இருந்தும் அடக்க விலை கிடைக்காத நிலைதான் இருந்து வருகிறது. மக்கள் கேட்பது குறைந்த விலை ஜவுளி ரகங்கள்தான். தளபதி வேட்டி, கர்சீப், மஞ்சள், பச்சை, கருப்பு, காவி உள்ளிட்ட பல கலர் வேட்டிகள் தயாரித்து வந்த நிலையில் தற்போது ஆர்டர் எடுத்த விலைக்கு விற்க முடியாததால் இந்த ரகங்கள் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனவால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. நம்மை நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர் வாழ்வாதாரம் காத்திட ஒரு வாரம் ஜவுளி உற்பத்தி செய்தும், ஒரு வாரம் விடுமுறை விட்டும் வந்தோம். தற்போது பண்டிகை நடந்து வருவதால், மார்ச் 10 முதல் 15 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.சங்க செயலர் சுந்தரராஜ், பொருளர் ராஜேந்திரன், உள்பட பலர் உடனிருந்தனர்.கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பிலும் இதே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பூபதி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu