குமாரபாளையம் அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர் பலி: 13 பேர் படுகாயம்
குமாரபாளையம் அருகே தனியார் பேருந்து கவிழ்த்து விபத்துக்குள்ளானது.
குமாரபாளையம் அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர் விபத்து ஏற்பட்டு தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர் பலியானதுடன் 13 பேர் படுகாயமடைந்தனர்.
பெங்களூரு நகரிலிருந்து பழனி செல்ல தனியார் சொகுசு பேருந்து நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் புறப்பட்டது. இதனை ஓட்டுனர் அழகுமணி (வயது37,) ஓட்டி வந்தார். சங்ககிரி அருகே டோல்கேட் பகுதியில் டீ குடித்து விட்டு, தூக்கம் வருவதாக கூறி, உதவி ஓட்டுனர் வீரபிரதீப்( 27,) என்பவரை பேருந்தை ஓட்ட சொல்ல, வீர பிரதீப் பேருந்தை ஓட்டி வந்தார். குமாரபாளையம் அருகே வட்டமலை பஸ் நிறுத்தம் தாண்டி, தட்டான்குட்டை மயானம் அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல வேண்டி வேகமாக செல்ல, சிறிது தூரத்தில் சர்வீஸ் சாலைக்கு செல்ல திரும்பும் இடத்தில், பேரி கார்டுகளை பார்த்தவுடன், திடீரென பிரேக் போட, சாலையின் இடது புறம் உள்ள சர்வீஸ் சாலையில் பேருந்து குப்புற கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனுப்பி வைத்தனர். இதில் ஓட்டுனர் வீரபிரதீப் வழியில் உயிரிழந்தார். மேலும் இதில் பயணம் செய்த பேருந்து ஓட்டுனர் அழகுமணி, ஜெயிலானி, சிவசக்த, அதித் பிரணவ், பாவேஸ், சுதர்சன் ஆறுசாமி, சண்முகவடிவேல், சுகந்தாதேவி, துரைசாமி, வர்சா, நாகராஜ், வனிதா ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இதே இடத்தில் ஒரு வாரத்தில் மூன்று விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இங்கு பிரிவு சாலை உள்ளது என்பதை தெரிவிக்கும் போர்டுகள் இல்லை. ஒரே ஒரு எச்சரிக்கை விளக்கு உள்ளது. இதுவும் அடிக்கடி பழுதாகி எரியாமல் போகிறது. புறவழிச்சாலை பகுதியில் எதிர்மேடு பகுதியிலிருந்து வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இது போல் விபத்துக்குள்ளாகி பலரும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த இடத்திற்கு பல கி.மீ. முன்பிருந்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும், சர்வீஸ் சாலை திரும்பும் பகுதியில் மூன்று சிவப்பு விளக்குகள் அமைக்க வேண்டும், மேலும் பல போகஸ் லைட்டுகள் அமைக்க வேண்டும். அப்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு பிரிவு சாலை இருப்பது தெரியவரும். விபத்துக்கள் எற்படுவது தடுக்கப்படும். அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu