குமாரபாளையத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த   நாள் விழா
X

குமாரபாளையத்தில் நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடிவினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொறுப்பு தலைமையாசிரியர் மாதேசு, ஆசிரியர்கள் குமார், முத்து, நிர்வாகிகள் அருள், தங்கராஜ், அம்சா, ஜெகதீஸ்வரன், உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பிரகாஷ் பேசியதாவது:-

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்பது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அகிம்சை பற்றியும் இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன் பிள்ளை, அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார்.அவரது தந்தை மோகனூரில் காவல்துறையில் பணிபுரிந்து வந்தார் மற்றும் இவரது தாயார் ஒரு பக்தியுள்ள பெண்மணி ஆவார். இவர் தங்கள் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை ஆவார். நாமக்கல் மற்றும் கோயம்பதூரில் பள்ளி கல்வி பயின்றார்.

1909 இல் பி.ஏ. திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்றார். இவர் ஆரம்பகாலத்தில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுதாளராகவும் பின்னர் தொடக்க பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர்.

1930 இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரின் மலைக்கள்ளன் நாவல் எம். ஜி. ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story