பள்ளிபாளையத்தில் துப்பாக்கியுடன் வடமாநில இளைஞர்கள் இருவர் கைது.. பரபரப்பு தகவல்கள்...

பள்ளிபாளையத்தில் துப்பாக்கியுடன் வடமாநில இளைஞர்கள் இருவர் கைது.. பரபரப்பு தகவல்கள்...
X
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொழில் நிமித்தமாக வெளிமாநில இளைஞர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிபாளையம் அடுத்த வால்ராசம்பாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த இரண்டு இளைஞர்கள் அறை எடுத்து தங்கி வேலைபார்த்து வருகின்றனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்களை நூற்பாலைகளில் வேலைக்கு சேர்த்து விடும் பணியை அவர்கள் செய்து வந்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் பள்ளிபாளையம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அவர்களின் நடத்தையில் கடந்த சில நாட்களாக மாறுதல் இருந்ததால் அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிலர் வெப்படை காவல் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் இரண்டு நாட்களாக அந்த இளைஞர்களின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தனர். மேலும், அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை திடீரென அதிரடியாக சுற்றி வளைத்தனர். வீட்டிற்குள் திடீரென புகுந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்களில் ஒருவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஸ்குமார் (வயது 26) என்றும் மற்றொருவன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (19) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பெட்டியை போலீஸார் சோதனை செய்ததில், அதில் ஒரு கைத்துப்பாக்கியும், எட்டு தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கிக்கான உரிமம் ஏதும் அவர்களிடம் இல்லை.

இதையெடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் போலீஸாரிடம் கூறும்போது தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், போலீஸார் அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai based agriculture in india