குமாரபாளையத்தில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு.. பொதுமக்கள் போராட்டம்...

குமாரபாளையத்தில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு.. பொதுமக்கள் போராட்டம்...
X

குமாரபாளையம் காவேரிநகர் நிறுத்தத்தில் நிற்காத தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடில் இருந்து குமாரபாளையம் வழியாக எடப்பாடிக்கு தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து குமாரபாளையம் நுழைவுப்பகுதியான காவேரிநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

காவேரிநகர் பகுதியில் சுமார் 3 வார்டுகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் ஈரோடு நகருக்கு பெரும்பாலோர் வேலைக்கு சென்று வருகின்றனர். காலையில் இந்த பேருந்தில் சென்றால் வேலைக்கு செல்ல சரியாக இருக்கும் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் பேருந்திலிலேயே பயணித்து வருகின்றனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட அந்த தனியார் பேருந்து காவேரிநகர் நிறுத்தத்தில் நிற்காமல் நேரடியாக பேருந்து நிலையத்திற்கு சென்றுதான் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம்போல இன்றும் அந்த தனியார் பேருந்து காவேரிநகர் நிறுத்ததில் நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் அந்த தனியார் பேருந்தை சிறைபிடித்து, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநரிடம் போலீஸார் கேட்டபோது, காவேரிநகர் பகுதியில் நிறுத்தம் கிடையாது என்று தெரிவித்தனர். பின்னர், போலீஸார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பினர். இருப்பினும், பொதுமக்கள் காவேரிநகர் பகுதியில் அந்த தனியார் பேருந்து நின்றுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இந்த பிரச்னை குறித்து தேமுதிக மாவட்ட துணை செயலாளர் மகாலிங்கம் கூறியதாவது:

குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை, ஸ்பின்னிங் மில்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் பல்லாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். வெப்படை, பள்ளிபாளையம், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், கல்லங்காட்டுவலசு, மேட்டுக்கடை, எடப்பாடி, தேவூர், உள்ளிட்ட பல பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள்.

காவேரிநகர் பகுதியில் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து ஈரோடு, சித்தோடு, பெருந்துறை சிப்காட், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும் இங்கிருந்து ஈரோடு பகுதியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயில மாணவ, மாணவியர் சென்று வருகிறார்கள்.

அவர்களுக்கு இந்த பேருந்து மிகவும் உதவியாக இருந்து வந்தது. ஆனால், குமாரபாளையம் நுழைவுப்பகுதியான காவேரிநகர் பேருந்து நிறுத்தத்தில் இந்த தனியார் பேருந்து நிற்பதில்லை. கேட்டால் எங்களுக்கு இது ஸ்டாப் கிடையாது என்கின்றனர்.

மூன்று வார்டு பொதுமக்கள் இருக்கும் இந்த பகுதியில் பேருந்தை நிறுத்தாமல் எங்கு நிறுத்துவார்கள். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இருக்கையுடன் பேருந்து நிறுத்தமும் கட்டப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு காவேரிநகர் பேருந்து நிறுத்தத்தில் அந்த தனியார் பேருந்து நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மகாலிங்கம் தெரிவித்தார்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!