குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்…
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்:
அனுமதியின்றி மது விற்றதாக ஒருவர் கைது:
குமாரபாளையம் பேருந்து நிலையம் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்றுக்கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குமாரபாளையம் போலீஸார் பேருந்து நிலையம் பகுதியில் திடீரென ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒருவர் மது விற்றுக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பவானியை சேர்ந்த வேல் (வயது 48) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இருசக்கர வாகனங்கள் மோதியதில் 3 பேர் படுகாயம்:
பள்ளிபாளையம் வட்டூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 51). விவசாயி. இவரும், எலச்சிபாளையத்தை சேர்ந்த தங்கவேலுவும் (61) உறவினரின் மகனுக்கு வரன் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் சென்றனர். சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் அவர்கள் சாலையை கடக்கும் போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் விபத்தில் காயமடைந்த மற்றொருவர் சென்னையை சேர்ந்த மணிசேகர் (25) என்பது தெரியவந்தது.
அனுமதியின்றி மது விற்ற நபர் கைது:
குமாரபாளையம் அருகே எதிர்மேடு வாய்க்கால் கரை அருகே அனுமதி இல்லாமல் மது விற்பதாக குமாரபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் ரவி தலைமையில் நேரில் சென்ற போலீஸார் அங்கு ஒருவர் மது விற்றுக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், கோவிந்தமங்களம் பகுதியை சேர்ந்த சூரசங்கு (வயது 28) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த 6 மது பாட்டில்கலை பறிமுதல் செய்த போலீஸார் சூரசங்குவை கைது செய்தனர்.
செல்போன், பணம் திருட்டு:
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, காப்ரா மலை பகுதியில் வசிப்பவர் துரையரசன் (வயது 27). இவர் ஆனங்கூர் சாலை, சேட்டாங்காடு, தங்கவேல் சைசிங் மில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல தனது வீட்டின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தாராம்.
அப்போது இரண்டு பைக்கில் வந்த 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நான்கு பேர், திடீரென துரையரசன் வாகனத்தில் இருந்த செல்போன் மற்றும் 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் துரையரசன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu