குமாரபாளையம் பகுதி அரசு பள்ளிச் செய்திகள்…

குமாரபாளையம் பகுதி அரசு பள்ளிச் செய்திகள்…
X

நாராயணநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பசுமை காவலர் விருது வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் நிகழ்ந்த செய்திகள் சிலவற்றை பார்ப்போம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் நிகழ்ந்த பல்வேறு விழா மற்றும் விழிப்புணர்வு செய்திகள் குறித்த விவரம் வருமாறு:

பசுமை காவலர் விருது:

குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் ஏற்பாட்டில், மரக்கன்றுகள் வைத்து, வளர்த்து, பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வரும் ஆயிரம் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பசுமை, கல்வி, தர்மம் பொதுநல அமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தர்ம தோப்பு வாசுகி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பசுமை காவலர் விருது வழங்கப்பட்டது.

தளிர்விடும் பாரதம் அமைப்பின் தலைவர் சீனிவாசன், செயலாளர் பிரபு, வரதராஜன், ஜூவல்லரி செந்தில், மகேந்திரன், செல்வராணி, தலைமை ஆசிரியைகள் கவுசல்யாமணி, பாரதி, நாகரத்தினம் உள்பட பலர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பேரணி:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு, காவல் துறை தலைவர் உத்தரவின் பேரில் குமாரபாளையத்தில் போலீஸார் மற்றும் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குறித் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

மேற்குகாலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி முன் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை காவல் ஆய்வாளர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள் காவல் நிலையம் முன்பு பேரணியை நிறைவு செய்தனர்.

தொடர்ந்து, காவல் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு எண்கள் 1091, 1098, 1930 ஆகியவை குறித்தும், வழக்குப்பதிவு செய்வது, சிறையில் அடைப்பது, கண்காணிப்பு கேமராவில் குற்ற நடவடிக்கைகள் கண்காணிப்பது, போக்குவரத்து விதிமுறைகள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது என அறிவுறுத்தல், குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என எடுத்துரைத்தல், ஹெல்மெட் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது என கூறுதல் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, ஒரு மாணவரை காவல் ஆய்வாளர் தனது இருக்கையில் அமர வைத்தும், இன்னொரு மாணவியை உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்தும் இதோபோல் படித்து உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சயில், விடியல் பிரகாஷ், தலைமை ஆசிரியை கவுசல்யாமணி, உதவி ஆய்வாளர்கள் மலர்விழி, ஐசக் பாக்யநாதன், சேகரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகேசன், சிவகுமார், தலைமைக் காவலர் ராம்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

அரசுப் பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் நிகழ்ச்சி:

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட மாநிலம் தழுவிய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சமூக கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கான தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு கட்டமாக, அரசுப் பள்ளியில் இணைவோம், மகிழ்வோம் என்ற நிகழ்ச்சி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.

இதில், மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் சக மாணவர்கள், ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாற்றுத்திறன் மாணவர்களின் வகுப்பறை கற்றல், பள்ளியின் சமூக சூழல், சக மாணவர்களுக்கு மாற்றுத்திறன் மாணவர்கள் பற்றிய புரிதல் உருவாக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்க்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புறை திறப்பு:

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நகராட்சி கல்வி நிதியின் மூலம் 18.25 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஸ்மார்ட் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் தொடர்ந்து, குத்துவிளக்கேற்றியும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நகராட்சி சார்பில் செய்து தரப்படும் என்றும் மாணவ, மாணவிகள் இது போன்ற நவீன தொழில்நுட்பங்களை நன்கு கற்றறிந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம், கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, ரேவதி, புஷ்பா, வேல்முருகன், ராஜ், சுமதி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil