குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள்...

குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த க்ரைம் செய்திகள்...
X
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே 18 பவுன் நகைகளை பறித்து சென்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர் உள்ளிட்ட, குமாரபாளையம் பகுதியில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

18 பவுன் நகைகள் பறிப்பு:

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் வசிப்பவர் சத்தியசுந்தரம் (வயது 40). இவர், வெப்படையில் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு 9:40 மணியளவில் கடையை பூட்டி விட்டு, மேட்டுக்கடை பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு சத்தியசுந்தரம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, மேட்டுக்கடை பிரிவு பகுதியில் இருசக்கர வாகனத்தை மடக்கிய 5 நபர்கள், சத்தியசுந்தரத்தை ஒரு காரில் கடத்திச் சென்று அவரது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், வருபவர்களிடம் நகைகளை கொடுத்து அனுப்பவும் என்று கத்தியை சத்தியசுந்தரத்தின் கழுத்தில் வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, சத்தியசுந்தரத்திந் மனைவியும் 18 பவுன் நகைகளை கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. நகைகளை பெற்றுக்கொண்ட 5 பேரும் இருசக்கர வாகனத்தை கொடுத்து சத்தியசுந்தரத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் சில நாட்கள் கழித்து சத்தியசுந்தரம் புகார் கொடுத்தார்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் கரூர் அருகேயுள்ள வேலூரை சேர்ந்த குமார் (வயது 37) ராஜன் (39), சலீம் (25) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தீபன் (32) ஏற்கனவே குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

பூமிநாதன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கைதான குமார், ராஜன், சலீம் ஆகிய மூன்று பேரும் குமாரபாளையம் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூலித் தொழிலாளி தற்கொலை:

குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் தன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த வீட்டின் முன்பு கணேசன் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

அனுமதியின்றி மது விற்றவர் கைது:

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து, காவல் ஆய்வாளர் ரவி தலைமையில், உதவி ஆய்வாளர் மலர்விழி உள்ளிட்ட போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காந்தியடிகள் தெருவில் ஒருவர் மது விற்பனை செய்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் அந்த நவரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்த நான்கு அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் மது விற்றவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் (வயது 43),என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!