குமாரபாளையத்தில் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் முத்துராமலிங்க தேவர்   பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா அரசு பள்ளியில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அருகே சானார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசியத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடிவினா போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம், தீனா உள்ளிட்டோர் வழங்கினர். இதில் ஆசிரியைகள் தேவிகா, நிருமா உள்பட பலர் பங்கேற்றனர்.

பசும்பொன் தேவர் பற்றி விடியல் பிரகாஷ் கூறியதாவது:-

முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கப்பட்டதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

1957-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story