சேறும், சகதியுமான நிலையில் செயல்படும் குமாரபாளையம் வாரச்சந்தை

குமாரபாளையத்தில் சேறும் சகதியுமாக இருக்கும் வாரச்சந்தை வளாகம்.
குமாரபாளையத்தில் சேறும், சகதியிலும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம குமாரபாளையம் பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. குமாரபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த வாரச் சந்தை சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது முதல், சந்தை வளாகத்தை சிமெண்ட் தரை தளமாக மாற்ற வேண்டி, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.
பல அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினரும் இதே கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த கட்சியினர் பொறுப்புக்கு வந்தாலும், இந்த வாரச்சந்தை பிரச்சனை தீர்ந்த பாடில்லை. உணவுப்பொருட்கள் விற்கப்படும் இடம் சேறும், சகதியுமாக இருந்தால், பொதுமக்கள் எப்படி வந்து வாங்குவார்கள்? தற்போது தினமும் மழை பெய்து வருகிறது. அதனால் சந்தைக்கு பொருட்கள் ஏற்றி வரும் டெம்போ உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சந்தை வளாகத்தில் சேற்றில் சிக்கி, வியாபாரிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள்.
சந்தை வளாகத்தின் நிலை, தொடர் மழையால் பொதுமக்கள் சந்தைக்கு வருவதும் குறைந்து வருகிறது. போதிய வியாபாரம் இல்லாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்படுகிறது. பள்ளிபாளையம் சாலை பூலக்காடு, சேலம், கோவை புறவழிச்சாலை, வட்டமலை ஆகிய இடங்களில் வாரச்சந்தைகள் உருவான நிலையில், குமாரபாளையம் சந்தைக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் சந்தை வளாகமும், இது போல் சேறும்,சகதியுமாக இருப்பதால், பொதுமக்கள் குமாரபாளையம் சந்தைக்கு வர தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி, சுகாதாரமான உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைத்திடும் வகையில், சந்தை வளாகத்தை சிமெண்ட் தரை தளமாக மாற்றி, ஒவ்வொரு கடைக்கும் சிமெண்ட் மேற்கூரைகளும் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu