விவசாயிகளிடம் பண மோசடி : காவல் நிலையத்தில் முற்றுகையிட்ட விவசாயிகள்..!
பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட விவசாயிகள்.
பள்ளிபாளையம் விவசாயிகளிடம் பண மோசடி செய்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
பள்ளிபாளையம் அடுத்துள்ள சீராம்பாளையம்,களியனூர் அக்ரகாரம், செங்குட்டை பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் வாழைத்தார் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கடந்த நான்கு வருடங்களாக, வாழைத்தார் மற்றும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்ட காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் சென்று வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக நான்கு வருடங்களாக வரவு செலவு சரியாக வைத்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தொழில் நடைபெற்று வந்த நிலையில் ,கடந்த ஒரு வருடங்களாக பல்வேறு பகுதி விவசாயிகளிடம் வாழைத்தார் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கிச் செல்லும் வியாபாரி சுரேஷ் உரிய பணம் தராமல் அலைகழிப்பு செய்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கேட்கும் போது அடுத்த முறை வரும்போது நிச்சயமாக பணம் தருகிறேன் என சுமார் ஒரு வருட காலத்திற்கு மேலாக பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ,மற்றொரு விவசாய நிலத்தில் வாழைத்தார் ஏற்றுவதற்காக வியாபாரி சுரேஷ் தனக்கு சொந்தமான தோஸ்த் வாகனத்தில் வந்திருந்த பொழுது அவரை சுற்றி வளைத்த விவசாயிகள், வாகனத்தை பறிமுதல் செய்து பணத்தை கொடுத்தால் மட்டுமே வாகனத்தை திருப்பி தர முடியும் என தெரிவித்தனர்.
இது குறித்த இரு தரப்பினர் புகார் பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், பள்ளிபாளையம் போலீசார் இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.இதில் விவசாயிகள் பறிமுதல் செய்து வைத்திருந்த தோஸ்த் வாகனத்தை வியாபாரியிடம் போலீசார் தந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் எங்களுக்கு உரிய பணம் கிடைக்காத பட்சத்தில் எவ்வாறு நீங்கள் , நாங்கள் சிறைபிடித்த வாகனத்தை அந்த வியாபாரிடம் ஒப்படைக்கலாம் எனக் கூறி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் விவசாயிகளை சமரசப்படுத்தி, உடனடியாக பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் காவல் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu