தம்பியை முன்னிறுத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி: தங்கமணி எம்எல்ஏ புகார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு சுவாமி கும்பிட வந்த குமாரபாளையம் எம்.எல்.ஏ. தங்கமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியதாவது:
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை மதுபானக்கடை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தி.மு.க.வினர்கள். இந்த போராட்டத்தின் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 6,400 மனுக்கள் மட்டுமே வந்ததாகவும், தற்போது 12 ஆயிரம் விருப்ப மனுக்கள் வந்ததாகவும், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியில் திறந்த முறையில் மனுக்கள் பெற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை எப்படி என்று உங்களுக்கே தெரியும்.
மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுபானக்கடைகள் மூடப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது உதாரணத்திற்காக பள்ளிபாளையம் நகரத்திலேயே இரண்டு மதுபான கடைகள் அதிகரித்துள்ளன. மேலும் சந்து கடைகளும் அதிகரித்துள்ளன. இது குறித்து தி.மு.க.வினரே என்னிடம் புகார் கூறியுள்ளனர். இது குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் பேச அனுமத்தித்தால் இந்த விபரம் தெரிவிப்பேன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை சந்திக்க வரும் தொழிலதிபர்களிடம், தனக்கு வேலைப்பளு அதிகம் உள்ளதால், தன்னால் 40 சதவீத பணிகள் மட்டுமே செய்ய முடிவதாகவும், மீதமுள்ள 60 சதவீத பணிகள் எனது தம்பி அசோக் பார்த்துகொள்வார், அவரை பாருங்கள் என்று தொழில் அதிபர்களிடம் கூறி வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் என்பது ஒரு பொறுப்பான பதவி ஆகும். ஆனால் அவர் தனது தம்பியை முன்னிறுத்தி பேசுகிறார்.
கடந்த ஆட்சி காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் தொகுதியான கொளத்தூரில், இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அப்போது, இரவு என்றும் பாராமல் நேரில் சென்று குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தேன். ஆனால் இந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தில் எத்தனை பேர் இறந்தனர் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் யார் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.
கடந்த ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இலவச மின்சாரத்தில் அளவுகளை குறிப்பதற்காக மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டன. ஆனால் அதற்கு அப்போதைய எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பத்திரிகைகளும் கண்டனம் தெரிவித்தனர். இதனை முதல்வர் இடைப்பாடி பழனிசாமி மீட்டர் பொருத்தும் பணியை நிறுத்த சொன்னதின் பேரில் நிறுத்தப்பட்டது.
ஆனால் தற்போதைய ஆட்சியில் தாங்கள் விவசாயத்திற்கு மின்சார அளவினை குறிப்பதற்காக மீட்டர்கள் பொருத்துவதற்கு தெரிவித்தனர். இப்போது யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. மேலும் மின்சாரத்துறை என்பது பொறுப்பான துறை. பொதுமக்களுக்கு அதிகம் பயன்படக்கூடிய துறை. இந்த துறையை தமிழக முதல்வர் தனது கவனத்தில் கொள்ள வேண்டும். இது தன்னுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu