குமாரபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

குமாரபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
X
இப்பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து சாயப்பட்டறைகளும் ரிமோட் சென்சார் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அருகே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சவுதாபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின் குமாரபாளையம் நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தாசில்தார் தமிழரசி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர், அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சுற்று சூழலை பாதுகாக்க, மாசற்ற தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஆய்வு செய்ய வந்தோம். குமாரபாளையம் பகுதியில் உள்ள நீரேற்று நிலைய கண்காணிப்பு மீட்டர்கள், மிகவும் பழமையானதாக உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மீட்டர்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து சாயப்பட்டறைகளும் ரிமோட் சென்சார் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது காவிரி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்காமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ரிமோட் சென்சார் மூலம் கண்காணிக்கப்படும் விவரங்கள், சென்னையில் இருந்ததவாறு அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் ஆற்றில் கலந்தால், அக்கணமே மணி ஒலிக்கும். தகவலறிந்து, சம்பந்தபட்ட அதிகாரிகள் மூலம் அந்த சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்று சூழலை மீட்டெடுப்பது, நீர் ஆதாரத்தை மீட்டெடுப்பது என மிக மிக முக்கியமான கருத்துகளை கூறியுள்ளார்கள்.

நொய்யல், பவானி, காவிரி, காளிங்கராயன் நதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை சேலம் மாவட்ட எல்லை பகுதியில் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதால், அது பற்றி இந்த பகுதி அமைச்சர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகள் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்படுகிறது. எங்கெங்கு குப்பை கிடங்குகள் அமைக்க தேவை உள்ளதோ, அங்கு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை யாரும் எரிக்க கூடாது. இதனால் காற்று மண்டலமே மாசு அடைகிறது.நாம் சுவாசிக்கும் போது அதே புகை நமக்கு நோயாக மாறும். அப்படி யாராவது குப்பைகளை எரித்தால் இந்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.


Tags

Next Story
ai solutions for small business