கல்விக்கடன் பெற்றவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..!
கல்விக்கடன் பெற்றவர்களுக்காக நடந்த ஆலோசனைக் கூட்டம்.
குமாரபாளையத்தில் கல்விக்கடன் பெற்றவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெற்ற பயனாளிகள் பாதுகாப்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் விடியல் பிரகாஷ் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது.
1) வங்கிகள் மூலம் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் சிரமப்பட்டு வரும் பட்டதாரிகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பொதுத்துறை வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியும் மற்றும் வசூல் நடவடிக்கையை தனியாரை ஈடுபடுத்தி அவமானப்படுத்தும் விதமாக கடன் தாரர்கள் வீடுகளுக்குச் சென்று கொச்சையாக திட்டுவதும் அசிங்கமாக பேசுவதும் போன்ற நடவடிக்கைகளை வங்கிகள் கைவிட வேண்டும்
2) வங்கி மூலம் பெற்றுள்ள கல்விக் கடன் அனைத்தையும் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த அடிப்படையில் தள்ளுபடி செய்திட வேண்டும்.
3) மத்திய மாநில அரசுகள் பட்டதாரிகள் அனைவருக்கும் உடன் வேலை வழங்க வேண்டும். அதன் மூலம் கல்வி கடன் அனைத்தையும் திரும்ப அடைக்க ஏதுவாக சூழ்நிலை உருவாக்க வேண்டும்
4) உயர் கல்வி பயில அனைத்து மாணவர்களுக்கும் புதிய கடனை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் வசம் மனு கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் பாண்டியன், சித்ரா, பஞ்சாலை சண்முகம், சுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து கல்வியையும் அரசு இலவசமாக வழங்கவேண்டும். நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் மாணவர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு கந்துவட்டி வசூலிப்பதுபோல தனியார் ஆட்களை வைத்து வசூல் செய்ய நினைப்பது சரியான செயல் அல்ல. கோடிக்கணக்கில் கொள்ளையடித்தனர் எல்லாம் தலை மறைவாக வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். பெரிய நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை அரசு தள்ளுபடி செய்கிறது.
அவ்வாறு செய்யமுடியும் அரசுக்கு படிப்பதற்கு வசதி இல்லாமல் கடன் வாங்கி படித்த மாணவர்களை துன்புறுத்தும்விதமாக அடியாட்களை அனுப்புவதுபோல ஆட்களை அனுப்பி கடன் வசூல் செய்வது, கந்து வட்டி வசூலிப்பவர்களுக்கு சமம். அதனால் அரசு கோடீஸ்வரர்களும் தள்ளுபடி செய்வதைப்போல இந்த கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்பது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu