தி.மு.க.வினருக்கு தேர்தலில் பாடம்: அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
குமாரபாளையத்தில் நடந்த அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில், அத்துமீறலில் ஈடுபடும் தி.மு.க.வினருக்கு, வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்தார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர் அட்டைகளை வார்டு செயலாளர்கள் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு சென்று சேருவது இல்லை. எல்லோருக்கும் முதலில் உறுப்பினர் அட்டை கொடுக்க வேண்டும், என்று கூறியதன் பேரில், மாநிலம் முழுதும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்து வருகிறது.
தி.மு.க.வினர் செல்லும் இடமெல்லாம் அத்துமீறல். ஓட்டல் கடையில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் கொலை செய்கிறார்கள். கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தாலிக்கு தங்கம், லேப்டாப், டூவீலர்கள் போன்ற திட்டங்கள் நிறுத்தி விட்டார்கள். இதெல்லாம் கொஞ்ச நாள்தான். அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அடுத்த ஆட்சி அ.தி.மு.க.ஆட்சி அமைய அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் செந்தில், குமரேசன், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu