நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு : வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு..!

நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு : வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு..!
X

குமாரபாளையத்தில் புதிய நீதிமன்றம் கட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேட்டுக்கடை பகுதியில் இடம் ஆய்வு செய்தனர். 

குமாரபாளையத்தில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு செய்தனர். அந்த இடத்திற்கு வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குமாரபாளையத்தில் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நீதிமன்றம் கட்ட இடம் ஆய்வு செய்தனர். அந்த இடத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டிடம் கட்ட பல இடங்களில் ஆய்வு செய்த நிலையில், நேற்று ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் இடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பு நீதிபதிகளான பாலாஜி, அப்துல் குத்தூஸ் ஆகிய இருவரும் நேரில் ஆய்வு செய்தனர். இந்த நிலத்தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரங்கள் செல்வதை கண்டு, மின்வாரிய அதிகாரிகள் வசம் விபரங்கள் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் இந்த இடத்தில நீதிமன்றம் கட்டினால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை, வெகு தொலைவு, மின்வாரிய உயர் கோபுர விபத்து அபாயம், பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி இந்த இடத்தில் நீதிமன்றம் கட்ட குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ,சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் நீதிபதிகள் வசம் ஆட்சேபம் தெரிவித்து மனு வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஐயப்பன், நடராஜன், நாகப்பன், உதயகுமார், கார்த்திக், ராமசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.

இது பற்றி பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கூறியதாவது:

நீதிமன்றம் கட்ட மேட்டுக்கடை சரியான இடம் அல்ல. ஏனெனில் போதுமான பஸ் வசதி கிடையாது. அதிக குடியிருப்புகள் அப்பகுதியில் கிடையாது. மக்கள் நடமாட்டமும் அதிகம் இருக்காது. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். வழக்கு சம்பந்தமாக இந்த இடத்திற்கு பெண்கள் வந்து செல்வது என்பது சாத்தியமானது அல்ல. சரியான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.

ஆளில்லாத இடத்தில் பெண்கள் காத்திருந்து பேருந்தில் ஏறவும் முடியாது. சமீபத்தில் பள்ளிபாளையம் பகுதியில் வயதான மூதாட்டிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பணம் வைத்திருக்க பாதுக்காப்பான இடம் அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது:

மேட்டுக்கடை அருகே உள்ள இடம் போதிய பாதுகாப்பு இல்லாத இடம். மின் வாரிய உயர் அழுத்த மின் கம்பிகள் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதற்கு எங்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதற்கு மாறாக மற்றொரு இடமும் காண்பித்து உள்ளோம். அதனை தேர்வு செய்வது குறித்து பரிசீலனை செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். சார்பு நீதி மன்றம் அமைக்க, பள்ளிபாளையம் சாலை, கே.ஓ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வாடகை கட்டிடத்தை நீதிபதிகள் பார்வையிட்டனர். புதிய கட்டிடம் கட்டிய பின், தற்போது செயல்பட்டு வரும் குற்றவியல் நீதி மன்றம், உரிமையியல் நீதி மன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் உள்பட மூன்று நீதி மன்றங்களும் புதிய கட்டிடத்தில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்