குமாரபாளையத்தில் ஆதரவற்றோர் மையம் நடத்தும் சாதனைப் பெண்!
ஆதரவற்றோர் மையத்தில் ஹேமாமாலினி.
ஆதரவற்றோர் மையத்தில் படித்து வளர்ந்த பெண் ஒருவர் தன்னப்போல யாரும் ஆதரவற்றோராக இருக்கக் கூடாது என்பதற்காக குமாரபாளையத்தில் ஆதரவற்றோர் மையம் நடத்தி வருகிறார். தனி ஒரு பெண்ணாக சாதனை புரிந்து வரும் அந்தப் பெண்ணின் பெயர் ஹேமாமாலினி.
தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும், ஆதரவற்றோர் மையம் செயல்பாடு குறித்தும் ஹேமாமாலினி கூறியதாவது:
நான் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவள். பெற்றோர் என் சிறு வயதில் இறந்ததால் நான் ஆதரவற்றோர் மையத்தில்தான் வளர்ந்தேன். மதுரையில் ஏ.என்.எம். டிப்ளமா நர்சிங் பயின்று வேலை செய்து வந்தேன். திருமணம் ஆகி சேலம் வந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து குமாரபாளையத்திற்கு வந்தேன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அன்னை ஆதரவற்றோர் மையம் என்ற பெயரில் முதியோர் காப்பகம் அமைத்தேன். என் பெற்றோர் இல்லை என்றாலும் இங்குள்ள முதியோர்கள் என் பெற்றோர்கள் என எண்ணி வாழ்ந்து வருகிறேன். முதலில் ஒருவர், அடுத்து இருவர் என தொடங்கி தற்போது மையத்தில் 35 பேர் உள்ளனர்.
அனைவருக்கும் 3 வேளை உணவு, உடை, மருத்துவ உதவி என என்னால் முடிந்தவைகளை கொடுத்து வருகிறேன். பலர் பல சூழ்நிலைகளில் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டு, மனதிற்கு அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் இங்கு வந்துள்ளனர்.
நான் அவர்களை கவனித்து கொள்கிறேன் என்பதை விட என்னை அவர்கள் மகள் போல் கவனித்து கொள்கிறார்கள். நல்ல மனம் படைத்த பலர் திருமண நாள், பிறந்த நாள், திருவிழா, வீட்டு திருமணம், உள்ளிட்ட பல விஷேச நிகழ்வுகளின் காரணமாக எங்கள் மையத்திற்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கத்தார் பல குழுவினர் சேவை மனப்பான்மையால் இங்கு உணவு கிடைத்து வருகிறது. நல்லது செய்தால் ஆண்டவன் துணை நிற்பான் என்பது போல் ஆண்டவன் துணையால் இந்த மையம் இனிதே செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்திற்கு அரசு சார்பில் உதவிகள் கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி உதவி செய்து கட்டில்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி உள்ளார். குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம், விடியல் ஆரம்பம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்பினர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
பவானி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஆனந்தவள்ளி எனபவர், காவேரி பாலத்தின் மீது மூதாட்டி ஒருவர் அழுதபடி நின்று கொண்டிருந்தைக் கண்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். அந்த மூதாட்டியின் பெயர் செல்லாயம்மாள். உடனே அவரை குமாரபாளையம் வட்டமலை ஜே.கே.கே.நடராஜா கல்லூரி பின்புறம் சத்யா நகரில் எனது தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்த்து விட்டார்.
மேலும், மையத்தில் தங்கி வாழ்ந்து வரும் முதியோர்கள், ஆதரவற்ற நபர்கள் 38 நபர்களுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் காவலர் அனந்தவள்ளி வழங்கி உதவினார். குமாரபாளையம்-சேலம் சாலையில் கிழிந்த ஆடையுடன் சில நாட்களாக சுமார் 40 வயதுடைய மன நலம் பாதித்த பெண் சுற்றித்திருந்தார். அதுபற்றி குமாரபாளையம் போலீஸாருக்கு மனித உரிமை கழக நிர்வாகிகள் செந்தில்குமார், அசோக்குமார் தகவல் தெரிவித்தனர். அந்த பெண்ணும் அன்னை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். எங்களது அன்னை ஆதரவற்றோர் முதியோர் இல்லம் மற்றும் காப்பகத்திற்கு உதவ விரும்புவபர்கள் 9944871202 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஹேமாமாலினி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu