குமாரபாளையம்: போக்குவரத்து இடையூறால் பேச்சை பாதியில் நிறுத்திய திருச்சி சிவா

குமாரபாளையம்: போக்குவரத்து இடையூறால் பேச்சை பாதியில் நிறுத்திய திருச்சி சிவா
X

குமாரபாளையத்தில் எம்.பி. திருச்சி சிவா பங்கேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதரவாக பிரச்சாரம் செய்தார்.

குமாரபாளையம் தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் பேச வந்த எம்.பி., திருச்சி சிவா போக்குவரத்து இடையூறால் பேச்சை பாதியில் நிறுத்தினார்.

குமாரபாளையம் தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் பேச வந்த எம்.பி., திருச்சி சிவா போக்குவரத்து இடையூரால் பேச்சை பாதியில் நிறுத்தினார்.

குமாரபாளையம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எம்.பி. திருச்சி சிவா நேற்று குமாரபாளையத்தில் பிரச்சாரம் செய்தார். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். இதில் திருச்சி சிவா பேசியதாவது:

நல்ல முடிவு என்று சொன்னால், எடுத்ததிற்கு பின்னால் வருத்தப்படாமல் இருப்பதற்கு பெயர் நல்ல முடிவு என்று பெயர். ஒருவரை தேர்வு செய்த பின், கோரிக்கை நிறைவேறவில்லை என்று சொன்னால் அதனால் பயனில்லை. காவலன் கண் விழித்திருந்தால் கள்வர்களின் பயம் இருக்காது. தேர்வு செய்யபடுபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மக்கள் நலமுடன் வாழலாம். இல்லாவிட்டால் நாமெல்லாம் துன்பப்பட வேண்டும் என்பதற்கு கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம். செயல்படாமல் இருந்த தமிழகம் ஸ்டாலின் வந்த பின் 6 மாத காலமாக மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. குமாரபாளையம் தொழில் மிகுந்த பகுதி. கழகத்தின் கோட்டை. இங்கு உழைப்பவர்களும் அதிகம், உண்மையை வாழ வைப்பவர்களும் அதிகம். கருணாநிதி மிகுந்த அன்பு வைத்திருந்த பகுதி குமாரபாளையம் பகுதி.

தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலினும் தனி கவனம் செலுத்த உள்ளார். அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு இவர்களை வந்து சேருகிறது. 2019ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் தீர்ப்பு வேறு மாதிரி இருந்தாலும், நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தில் பணியாற்றும் என்னை போன்றோருக்கு நாட்டை பாதுகாப்பது, அவசியமான சட்டங்களில் அவசர திருந்தங்களை மேற்கொள்வது, தீவிரவாதத்தை தடுப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் செயல்பட வேண்டிய, குரல் கொடுக்க வேண்டிய பணி. 2021ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆதரவால் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்ட அவருக்கு, அ.தி.மு.க. ஆட்சியால் சீர்கெட்டு போயிருந்த தமிழகத்தை, பொருளாதாரத்தை சீர்படுத்தி, வேலை இல்லா திண்டாட்டத்தை அகற்றி, உரிமை இழந்த மாநிலத்திற்கு அவைகளை பெற்று தந்து, மகளிரின் வாழ்விற்கு மாண்பினை பெற்று தர வேண்டிய மாபெரும் கடமை ஸ்டாலினுக்கு உள்ளது.

இந்த தேர்தல் குமாரபாளையத்திற்கு யார் தலைவர்? என்ற கேள்வி? உள்ளாட்சி அமைப்புகள் என்பது ரத்த நாளங்களை போல. வீடுகளுக்கு சுத்திகரிக்கபட்ட குடிநீர், தடைபடாமல் ஓடுகின்ற சாக்கடை வசதி, தெருவில் இருள் சூழாமல் இருக்க தெருவிளக்கு, மேடு, பள்ளம், குண்டு, குழிகள் இல்லாத நல்ல சாலைகள், நகராட்சி, அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதி, மருத்துவமனையில் தேவையான மருத்துவ வசதிகள், மருந்துகள் ஆகியவற்றை நிறைவேற்றும் பொறுப்பு நகரமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. இந்த பொறுப்பை ஒரு நாளில் ஏதோ கொடுத்து விட்டு ஓடிவிடும் கட்சிகளுக்கு அல்ல. உங்களுக்காக உழைக்க காத்திருக்கும் தி.மு.க.விடம் பொறுப்பை ஒப்படையுங்கள். தமிழக முதல்வர் இந்தியா முழுவதற்கும் எடுத்துக்காட்டாக ஆட்சி நடத்திக்கொண்டு உள்ளார். எளிமையின் அடையாளமாக திகழ்கிறார். தமிழகத்தை துணை கண்டங்கள் பரவசத்துடன் பார்க்கின்றன.

ஒவ்வொரு வாரமும் இடைப்பாடி பழனிச்சாமி தன் வீட்டிற்கு வருவாராம். இரு நாட்கள் கழித்து ஊருக்கு செல்லும் வரை சாலையில் பெண் போலீசார் காவலுக்கு நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இயற்கை உபாதை கழிக்க எவ்வளவு சிரமப்படும் சூழல் உருவானது. ஸ்டாலின் ஒரு நாள் வீட்டிற்கு செல்லும் போது வழியில் பெண் போலீசார் இருப்பதை பார்த்து, வீட்டிற்கு போன உடனே போட்ட சட்டம், பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தி வைக்கக் கூடாது என்பதுதான். இதுதான் மனிதாபிமானத்தின் வெளிப்பாடு. தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் மக்கள் துன்பம் போக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் வர வேண்டும். தனக்கு பின்னால் அதிக வாகனங்கள் வர வேண்டாம், போக்குவரத்து நிறுத்த வேண்டாம், என்று சொன்ன பெருமகன் ஸ்டாலின்தான். அவர் தேர்வு செய்த இந்த வேட்பாளர்கள் அவரை போல் மக்கள் நலன் காப்பார்கள் என்ற உத்திரவாதம் நான் தருகிறேன்.

(அப்போது மூன்று சாலைகளிலும் வாகனங்கள் நீண்ட தூரம் நின்றது. அதிலிருந்து ஒரு வாலிபர் மேடைக்கு முன்பு வந்து, ஐயா, நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவைகளை போக அனுமதியுங்கள், என்று கேட்டுக்கொள்ள, திருச்சி சிவா தன் பேச்சை நிறுத்திக்கொண்டார். வாகனங்களுக்கு வழி விடுங்கள் என்று கூறி, இப்படிபட்ட இடத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யலாமா? என்று மேடையில் இருந்த நிர்வாகிகளிடம் கேட்டார். போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசாரும் இல்லை என சலித்து கொண்டார். )

அதன் பின் பேசிய சிவா, வெற்றிவிழாவில் பேச மீண்டும் வருவேன். தி.மு.க. வினருக்கும், தோழமை கட்சியினருக்கும் அந்தந்த கட்சி சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள், என கூறி பேச்சை முடித்துக்கொண்டார். இதில் மாவட்ட செயலர் மூர்த்தி,முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெகன்னாதன், மூத்த நிர்வாகி மாணிக்கம், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!