குமாரபாளையம் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
குமாரபாளையத்தில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க தலைவர் பிரபாகரன் பேசினார்.
குமாரபாளையத்தில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி தொழிலை பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், தெளிவான விளக்கத்துடன், உத்திரவாதம் தரும் வேட்பாளருக்கே நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் ஆதரவு தர உள்ளதாகவும், இல்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
குமாரபாளையத்தில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது:-
இந்த கூட்டத்தில் தற்பொழுது விசைத்தறி தொழில் மிகவும் நலிவு அடைந்த சூழ்நிலையில் அதனை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு தேவைப்படும் சாய தொழிற்சாலைகளை மூடியதாலும், தற்பொழுது விசைத்தறி ஜவுளி உற்பத்தி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காட்டன் உற்பத்தி அதிகம் இருந்த நிலையில் தற்பொழுது பாலியஸ்டர் வகை நூல்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதியில் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விசைத்தறியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விசைத்தறிகளும் எடை போட்டு விற்கும் சூழ்நிலைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த சாய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் தற்போதைய தமிழக அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, ஆகியோர் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டிய இடத்தை நேரில் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி உள்ளனர். மத்திய அரசு இதற்கான ஏற்பாடுகள் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் நிலையில், இந்த பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் வெற்றி பெறுபவர்கள் மத்திய அரசிடம் சொல்லி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்த வேண்டும். அவ்வாறு வலியுறுத்துவேன் என உறுதி அளிக்கும் வேட்பாளருக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சாயத் தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம். அவ்வாறு உறுதி அளிக்க முடியாத பட்சத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களும் சாயத் தொழிற்சாலை உரிமையாளர்களும் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க செயலாளர்கள் நாகராஜன், வேலுமணி, பொருளர் மாதேஸ்வரன் உள்பட சங்க நிர்வாகிகள் பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu