குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு
X

குமாரபாளையம் விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதற்கான ஒப்பந்த கடிதம் தாசில்தார் சண்முகவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர். நான்கு கட்டங்களாக கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படாமல் தள்ளிக்கொண்டே போனது.

இந்த நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் அதே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 9:30 மணி வரை நீடித்தது. 12 சதவீதம் தருவதாக கூறியதால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையறிந்த தொழிலாளர்கள் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

அதன் தொடர்ச்சியாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும், குமாரபாளையம் போலீஸார் அவர்களை கலைய வைத்தனர்.

இந்நிலையில், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தாசில்தார் சண்முகவேல் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், உடன்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் கூறியதாவது:

குமாரபாளையம் விசைத்தறி கூலி உயர்வு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்கள் அடப்பு தறி உரிமையாளர்களுக்கு 15 சதவீதம் கூலி உயர்வும், அடப்பு தறி உரிமையாளர்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அனைத்து விசைத்தறி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி கூறியதாவது:

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு கேட்டு 15 நாட்களுக்கும் மேலாக மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிவில் ஜவுளி உற்பத்தியாளர்கள் அடப்பு தறி உரிமையாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு தருவதாக கூறினார்கள்.

அதே 10 சதவீத கூலி உயர்வினை தொழிலாளர்களுக்கு தருவதாக கூறினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. 20 சதவீதமாவது கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறினோம். தற்போது நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது என அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை கூட்டத்தில், நகர திமுக செயலர் செல்வம், ஓ.ஏ.பி. தாசில்தார் தங்கம், எஸ்.ஐ. மலர்விழி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, பாலுசாமி, நஞ்சப்பன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது