குமாரபாளையம், பள்ளிபாளையம் கிரைம் செய்திகள்
குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதியில் டிராக்டர் உள்ளிட்ட 6 வாகனங்களை திருடிய நபர்கள் இருவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
டிராக்டர் உள்ளிட்ட 6 வாகனங்களை திருடிய இருவர் கைது
குமாரபாளையத்தில் டிராக்டர் உள்ளிட்ட 6 வாகனங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் வசிப்பவர் துளசிமணி, 43. இவர் எஸ்.டி.டி. என்ற பெயரில் எம் சாண்டு, ஜல்லி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் ட்ரைலர் வாகனத்தை யாரோ ஈரோடு பக்கம் ஒட்டி செல்வதாக, பள்ளிபாளையத்தில் இதே தொழில் செய்து வரும் அன்புராஜ் என்பவர் சொல்ல, கல்லங்காட்டுவலசு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் மற்றும் ட்ரைலர் வாகனத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.
இதே போல் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை, ஜீவா நகரில் வசித்து வருபவர் ஜீவாராஜ், 28. மினி டெம்போ வைத்துகொண்டு பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி விட்டு, அக்டோபர் 12ம் தேதி காலை 10:00 மணியளவில் வெளியூர் சென்று விட்டார். மறுநாள் காலை 10:00 மணியளவில் வந்து பார்த்த போது, வண்டியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குமாரபாளையம் போலீசில் காணாமல் போன மினி டெம்போவை கண்டிபிடித்து தருமாறு புகார் செய்துள்ளார். இந்த புகார்களின் படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் காவேரி நகர் செக் போஸ்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி தலைமையிலான தனிப்படையினர் ரோந்து பணி மேற்கொண்ட போது, அவ்வழியே ட்ராக்டரில் வந்த இருவரிடம் விசாரணை செய்த போது, குற்றவாளிகள் இவர்கள்தான் என்பது தெரியவந்தது. விசாரணையில் பவானி காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ், 21, பவானி அருகே உள்ள சங்கரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 23, என்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து டிராக்டர், ட்ரைலர், டாட்டா ஏ.சி. சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் பவானியில் பொலீரோ ஜீப், கவுந்தப்பாடியில் டிராக்டர், பள்ளிபாளையத்தில் ட்ராக்டர், திருச்செங்கோடு பகுதியில் ட்ராக்டர் என மொத்தம் 6 வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதுடன், குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பள்ளிபாளையம் கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதில் ஸ்ரீ விநாயக வீவர்ஸ் ஜவுளி அதிபர் ஜெயபிரகாஷ் வீடு அமைந்துள்ளது. சம்பவத்தன்று ஜெயபிரகாசின் தந்தை மணி, 70, வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி பழனியம்மாள், 65. வீட்டின் பின் கட்டிலில் இருந்தார். மதியம் இரண்டு மணியளவில் சுமார் 10 பேர் கும்பலாக வந்து கதவை தட்டினார்கள். வயதான மணி, கதவை திறந்து யார்? என கேட்டார். உங்கள் மகன் ஜெயபிரகாசை பார்க்க வந்துள்ளோம் என கூறினார்கள். அவரை கீழே தள்ளி கை, கால்களை கட்டி போட்டு பணம் எங்கே உள்ளது என கத்தியை கட்டி மிரட்டியுள்ளனர். அவர் பீரோவில் உள்ளது என கையை காட்டியுள்ளார். பீரோவில் இருந்த 27 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். கட்டிலில் இருந்த பழனியம்மாள் சத்தம் கேட்டு வந்தார். அவரையும் மிரட்டி, நகை எங்கே உள்ளது? என கேட்டுள்ளனர். அந்த பீரோவில் உள்ளது என கூறியுள்ளார். பீரோவை திறந்து தங்க செயின்கள், வளையல்கள், தோடுகள் என சுமார் 18 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அம்மா வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு, சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோமென மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். பழனியம்மாள் தனது கணவரின் கை, கால்களின் கட்டுக்களை அவிழ்த்து விட்டார். மகன் ஜெயபிரகாசுக்கு போன் செய்து விபரத்தை கூறினார்கள். அவர் பள்ளிபாளையம் போலீசுக்கு புகார் கொடுத்தார். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. செந்தில்குமார், சண்முகபிரியா உள்ளிட்ட போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் எடுக்கப்பட்டன. திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் சில நாட்கள் முன்பு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஓட்ட மெத்தை பகுதியை சேர்ந்த வேணுகோபால்,52, மோகனூர் பஸ் நிலையத்தில் ராஜா, மதுரையை சேர்ந்த கார்த்தி, 27, அந்தியூரை சேர்ந்த பூசாரி ரமேஷ், 45, ஆகிய நான்கு பேரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 47 ஆயிரம் ரொக்கப்பணம், பொலீரோ கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ. செந்தில், சண்முகபிரியா ஆகியோர் இவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu