குமாரபாளையம் முனியப்பன் சுவாமி கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்...
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோய்லை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோயிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றி சுவாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்படி, நடப்பு ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று குமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை இன்ரு நடைபெறுகிறது. நினைத்த காரியமும், வேண்டுதலும் நிறைவேற வேண்டும் என பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள் .பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்று இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முனியப்பா சுவாமி பற்றி ஆன்மீக பெரியவர்கள் கூறியதாவது:
முனீசுவரர் என்பவர் இந்து சமய சிறு தெய்வங்களில் ஒருவர் ஆவார். இவர் சைவ கடவுளான சிவபெருமானின் வடிவமாவார். வீரமும், ஆவேசமும் நிறைந்த தெய்வமான இவர் அந்தகாசுரனை அழித்தவராகக் கருதப்படுகிறார். முனீஸ்வரன் எனும் பெயர் முனிவர்களுக்கு எல்லாம் ஈசுவரனாக இருந்து ஞானத்தை வழங்கியவன் என்பதைக் குறிப்பிடும்.
கிராம மக்கள் முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர். நாட்டார் தெய்வங்களில் முனி என்பது காவல் தெய்வத்தின் பெயர் ஆகும். இந்தப் பெயரில் எண்ணற்றவர்கள் உள்ளதாக குறிப்புகள் உள்ளன. பஞ்ச முனி என ஐந்து முனிகள் பச்சையம்மனுக்கு காவலாக உள்ளன. சில இடங்களில் சப்த முனிகளும் உள்ளார்கள்.
வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி போன்ற ஐந்து முனிகளை பஞ்ச முனி என்கிறார்கள், இவர்கள் பச்சையம்மனுக்கு துணையாக இருந்தவர்கள். வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகளையும் வணங்குகின்றனர் என ஆன்மீக பெரியவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu